சேலம் அருகே, குடிபோதையில் நண்பர்கள் மீது ஏர்கன் துப்பாக்கியால் சுட்டதில் பால்ரஸ் குண்டுகள் பாய்ந்து பலத்த காயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக துப்பாக்கியால் சுட்ட விசைத்தறி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Advertisment

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே பெரிய சீரகாபாடியைச் சேர்ந்தவர் முருகன் (43). அதே ஊரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (40). தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). மூவரும் நண்பர்கள். இவர்கள், பெரிய சீரகாபாடியில் உள்ள ஒரு தறிப்பட்டறையில் வேலை செய்து வருகின்றனர்.

Advertisment

salem district incident two person admit in hospital

புதன்கிழமை (பிப். 12) மாலை, இவர்கள் மூவரும் வேலை முடிந்து, வீட்டில் இருந்தனர். அப்போது குடிபோதையில் இருந்த ரமேஷ், குருவிகளை சுட பயன்படுத்தும் ஏர்கன் துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு, மற்ற இரு நண்பர்களையும் பார்த்து விளையாட்டாக சுட்டு விடுவேன் என்று கூறினார். போதை தலைக்கேறிய நிலையில், திடீரென்று ஏர்கன் விசையை அமுக்கி விட்டார். அதிலிருந்து சீறிப்பாய்ந்த பால்ரஸ் குண்டுகள் முருகனின் முதுகு பகுதியிலும், வெங்கடாசலத்தின் காலிலும் பாய்ந்தன.

இதையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக குண்டடிபட்ட இருவரையும் மீட்டு, அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ரமேஷை கைது செய்தனர்.

Advertisment