salem city

Advertisment

குடிசைக்கு தீ வைத்து நாசப்படுத்திய ரவுடிகள் இருவரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

சேலம் அழகாபுரம் பெரிய புதூரில் உள்ள மாநகராட்சி பொதுக் கழிப்பறை அருகே வந்த ஒரு பெண்ணிடம், ஆபாசமாக பேசி ஒரு வாலிபர் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் அழகாபுரம் காவல்துறையினர், பெரிய புதூர் பம்பரகார வட்டம் போயர் தெருவைச் சேர்ந்த ரவி என்கிற வெங்கடேஷ் மகன் அஜித்குமார் (22) என்பவரை கைது செய்தனர். இச்சம்பவம் கடந்த ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி நடந்தது.

அந்த வழக்கில் பிணையில் வெளியே வந்த அஜித்குமார், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் அவரை எச்சரித்து அனுப்பினர். இதை மனதில் வைத்துக்கொண்டு, புகார் கொடுத்த மாணவியின் குடும்பத்தைப் பழிவாங்கும் நோக்கில், கடந்த மார்ச் 20 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில், அந்த மாணவியின் குடிசை வீட்டுக்கு தீ வைத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அஜித்குமாரை காவல்துறையினர் கைது செய்து, சேலம் மத்தியச் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

Advertisment

salem

இது ஒருபுறம் இருக்க, சேலத்தை அடுத்த பள்ளிப்பட்டி சாமியார் கரடு பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் நாட்டாமை செல்வம் என்கிற தமிழ்ச்செல்வம் (25), கடந்த மார்ச் 4 ஆம் தேதியன்று, அம்மாபேட்டையைச் சேர்ந்த சுதாகர் என்பவர் மன்னார்பாளையம் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவரை கத்தி முனையில் மறித்து 2 பவுன் சங்கிலியை வழிப்பறி செய்துள்ளார். அவரும் கைது செய்யப்பட்டு, சேலம் மத்தியச் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.

நாட்டாமை செல்வம் ஏற்கனவே பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

இதையடுத்து, ரவுடிகள் அஜித்குமார் மற்றும் நாட்டாமை செல்வம் ஆகியோர் பொது அமைதிக்குக்குந்தகம் விளைவித்து வந்ததால் அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்படி மேற்படி நபர்கள் இருவரும் வியாழனன்று (மே 21) குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். குண்டர் சட்ட கைது ஆணை, சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் நேரில் சார்வு செய்யப்பட்டது.

http://onelink.to/nknapp

இவர்களில் தமிழ்ச்செல்வம் என்கிற நாட்டாமை செல்வம் தற்போது மூன்றாவது முறையாகக் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.