/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gh434.jpg)
சேலம் அருகே, குடும்பத் தகராறில் ஆத்திரம் அடைந்த கணவர், மனைவியின் தலையில் கிரைண்டர் குழவி கல்லை போட்டு கொடூரமாகக் கொலை செய்தார்.
சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரில் உள்ள தேவாங்கர் காலனியைச் சேர்ந்தவர் செல்வம். அப்பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில் தேநீர் போடுபவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயந்தி (வயது 65). இவர்களுடைய மகன் நாகராஜ், திருச்செங்கோட்டில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், செல்வத்திற்கும், ஜெயந்திக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அக். 7- ஆம் தேதி இரவும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த செல்வம், வீட்டில் இருந்த கிரைண்டர் குழவி கல்லை எடுத்து ஜெயந்தியின் தலையில் போட்டுள்ளார்.
பின்னர் அவர் வீட்டில் இருந்து வெளியே கிளம்பிவிட்டார். இதையடுத்து செல்வம், சனிக்கிழமை (அக். 8) காலையில் வீட்டுக்கு அருகில் உள்ள அவருடைய நண்பரான சசிக்குமார் என்பவரின் தேநீர் கடைக்குச் சென்றார். அப்போது அவர் முதல்நாள் இரவு நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு பதற்றம் அடைந்த சசிக்குமார், ஜெயந்தியின் வீட்டுக்குச் சென்று பார்த்தார். அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து வீராணம் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையறிந்த செல்வம் தலைமறைவாகி விட்டார். காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், ஜெயந்திக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனால் கணவன், மனைவி இடையே இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கணவர் அவரை கொலை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)