Skip to main content

சேலம் அருகே 140 ரூபாய்க்காக மூதாட்டி கழுத்து அறுத்து கொலை; இளைஞர் கைது!

சேலம் அருகே, கஞ்சா மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையான இளைஞர், வெறும் 140 ரூபாய்க்காக மூதாட்டியை கழுத்து அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் அருகே உள்ள திருமலைகிரியைச் சேர்ந்தவர் முத்து (57). இவருடைய தாயார் பழனியம்மாள் (75). இவர், தனது கணவர் பெரியண்ணன் இறந்து விட்டதை அடுத்து, முத்துவின் பராமரிப்பில்தான் வாழ்ந்து வந்தார்.  


இந்நிலையில், பிப்.27ம் தேதி, வீட்டுக்கு அருகில் உள்ள ரேஷன் கடை முன்பு பழனியம்மாள் உட்கார்ந்து இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 20 வயது இளைஞர் ஒருவர், திடீரென்று பழனியம்மாள் அருகே அமர்ந்து அவரிடம் மெதுவாக பேச்சுக்கொடுத்தார். பின்னர் அந்த இளைஞர், மூதாட்டி அணிந்திருந்த தோடு, மூக்குத்தியைக் கழற்ற முயன்றார். சந்தேகம் அடைந்த அவர், கூச்சல் போட்டார்.

salem district grandmother incident police investigation

அவருடைய கூச்சல் சத்தத்தில் ஊர் மக்கள் கூடிவிட்டால் என்ன செய்வது என்று பதற்றம் அடைந்த அந்த மர்ம நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மூதாட்டியின் கழுத்தில் குத்தியதுடன், கழுத்தையும் அறுத்துள்ளார். 


அதற்குள் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வரவே, அந்த மர்ம நபர், மூதாட்டி வைத்திருந்த சுருக்குப்பையை எடுத்துக்கொண்டு, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றார். கழுத்தை அறுத்ததால் அதிக ரத்தம் வெளியேறியதில், மூதாட்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 


இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த இரும்பாலை காவல்துறையினர் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். உடற்கூறு ஆய்வுக்காக சடலத்தை, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


சம்பவ இடம் அருகில் தனியார் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்ததில், மூதாட்டியை கழுத்து அறுத்துக் கொன்றவர் வேடுகாத்தாம்பட்டி பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் பாலாஜி (20) என்பது தெரிய வந்தது. திருமலைகிரி பகுதியில் பதுங்கியிருந்த பாலாஜியை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (பிப். 28) கைது செய்தனர். 


காவல்துறையில் கொலையாளி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:


"நான் வெள்ளிப்பட்டறைக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய அம்மா இறந்து விட்டார். அதன்பிறகு நான் சரியாக வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்தேன். 


நண்பர்கள் சிலர் மூலமாக எனக்கு கஞ்சா அடிக்கும் பழக்கமும் சூதாடும் பழக்கமும் ஏற்பட்டது. இது இரண்டும் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டேன். சில நாள்களுக்கு முன்புகூட எங்க சித்தி வீட்டில் 5 ஆயிரம் ரூபாயைத் திருடி, சீட்டு ஆடினேன். அந்த ஆட்டத்தில், எல்லா பணத்தையும் தொலைத்துவிட்டேன். 


மூதாட்டி பழனியம்மாள் தோடு, மூக்குத்தி, கால் காப்புகளை போட்டுக்கொண்டு தனியாக ரோட்டோரமாக ரொம்ப நேரமாக உட்கார்ந்து இருந்ததை நோட்டமிட்டேன். அதனால் அவரிடம் பேச்சுக்கொடுப்பதுபோல் நெருங்கி, தோடு, மூக்குத்தியை பறிக்க முயன்றேன். அதற்கு அவர் கத்தி கூச்சல் போட்டதால் கழுத்து அறுத்துக் கொன்றுவிட்டு, அவருடைய சுருக்குப்பையை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டேன். ஆனால் அந்த சுருக்குப்பையில் வெறும் 140 ரூபாய்தான் இருந்தது." இவ்வாறு கொலையாளி பாலாஜி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.


வெறும் 140 ரூபாய்க்காக மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவம் வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்