கெங்கவல்லி அருகே, இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன், மகள் ஆகியோர் உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்தவர் சின்னதம்பி (48). மின்வாரியத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சந்திரா (40). இவர்களுக்கு நித்யா (18) என்ற மகளும், சக்திவேல் (16) என்கிற மகனும் இருந்தனர்.

Advertisment

மகள், தனியார் கல்லூரியில் முதலாமாண்டும், மகன் தனியார் பள்ளியில் பிளஸ்2வும் படித்து வந்தனர். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சந்திரா கணவரை பிரிந்து, தனது இரு பிள்ளைகளுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீரகனூர் அருகே வெள்ளையூரில் உள்ள அவருடைய தாய் ராணி வீட்டில் வசித்து வந்தார்.

salem district gangavalli private bus and bike incident

Advertisment

குழந்தைகளின் படிப்பு செலவிற்காக பணம் கேட்பதற்காக கணவரைப் பார்க்க மகள், மகனுடன் செல்ல சந்திரா முடிவு செய்திருந்தார். அதனால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மகன், மகளை அழைத்துக்கொண்டு சந்திரா சென்று கொண்டிருந்தார்.

வீரகனூரை அடுத்த காமராஜர் நகர் அருகே சென்றபோது, எதிரில் கெங்கவல்லியில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து சந்திராவின் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் சந்திரா, அவருடைய இரு பிள்ளைகளும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த அவர்கள் மூவரும் ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே பலியாயினர். தெடாவூரைச் சேர்ந்த செல்வம் என்பவர்தான் விபத்துக்குக் காரணமான தனியார் பேருந்தை ஓட்டி வந்தார் என்பது தெரிய வந்தது. அவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

கெங்கவல்லி காவல்துறையினர் மூன்று பேரின் சடலங்களையும் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.