சேலம் அருகே, வாக்குச்சீட்டுகளில் தேர்தல் அலுவலரின் கையெழுத்து இல்லாமலேயே வாக்காளர்களை ஓட்டுப்போட அனுமதித்ததாக திமுக வேட்பாளரின் கணவர் பரபரப்பு புகார் எழுப்பி உள்ளார்.

Advertisment

சேலம் மாவட்டத்தில், எட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டாம் கட்டமாக திங்கள்கிழமை (டிச. 30) தேர்தல் நடந்தது. அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் விஜயகுமார். இவருடைய மனைவி ஹேமலதா. இவர், இந்த தேர்தலில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவர் சார்பில், கணவர் விஜயகுமார் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நிலவரங்களை கேட்டு வந்தார்.

salem district election officers not signature the ballot box dmk candidate

இந்நிலையில், வெள்ளியம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 35ம் எண் (அனைத்து வாக்காளர்கள்) வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிலவரத்தை தனது கட்சி முகவர்களிடம் கேட்டறிவதற்காகச் சென்றிருந்தார். அப்போது சில வாக்காளர்கள் வைத்திருந்த வாக்குச்சீட்டில், வாக்குச்சாவடி தேர்தல் அலுவலரின் கையெழுத்து இல்லாமல் இருப்பது தெரிய வந்தது.

Advertisment

இதுகுறித்து அவர் விசாரித்தபோது, சுமார் 130 வாக்குச்சீட்டுகளில் அவ்வாறு வாக்குச்சாவடி தேர்தல் அலுவலரின் கையெழுத்து இல்லாமலேயே வாக்குகள் செலுத்தப்பட்டு வந்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர், அங்கு பணியில் இருந்த வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர் எட்வின் என்பவரிடம் விசாரித்தார். அதற்கு எட்வின், நீங்கள் மிகைப்படுத்திச் சொல்கிறீர்கள். சில வாக்குச்சீட்டுகளில் மட்டுமே என் கையெழுத்தில்லை. நீங்கள் புகார் கூறிய பிறகு அதையும் சரி செய்துவிட்டேன் என்று விளக்கம் அளித்தார்.

ஆனாலும் விஜயகுமார், வாக்குச்சீட்டுகளில் கையெழுத்திடாதது குறித்து எழுத்து மூலம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு தேர்தல் அலுவலர், எதுவாக இருந்தாலும் மண்டல தேர்தல் அலுவலரிடம் பேசுங்கள் என்று கூறியதால் இருதரப்பிலும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

salem district election officers not signature the ballot box dmk candidate

Advertisment

அந்த வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஓமலூர் காவல் உதவி ஆய்வாளர் பரந்தாமன், ''நீங்கள் வாக்குச்சாவடியில் வந்து முறையிடுவது சரியில்லை. உயர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் சொல்லுங்கள். எங்கள் பணிகளை நீங்கள் இடையூறு செய்யக்கூடாது. எங்களுக்கு சட்டத்தில் பாதுகாப்பு இருக்கிறது. பணிகளை தடுத்ததாக நடவடிக்கை எடுக்க முடியும்,'' என்றார். பிறகு விஜயகுமார் மற்றும் திமுகவினர் அந்த வாக்குச்சாவடியை விட்டு கிளம்பினர்.

இதுகுறித்து விஜயகுமார் கூறுகையில், ''வெள்ளியம்பட்டி 9வது வார்டுக்கு உட்பட்ட 35- வது வாக்குச்சாவடியில், சேலம் சிஎஸ்ஐ பள்ளியில் உடற்கல்வி இயக்குநராக இருக்கும் எட்வின் என்பவர் வாக்குச்சாவடி தேர்தல் அலுவலராக பணியாற்றி வருகிறார். வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் சின்னத்தில் முத்திரையிட்டு, வாக்குப்பெட்டியில் வாக்குச்சீட்டை போடுவதற்கு முன்பாக, அந்த வாக்குச்சீட்டில் வாக்குச்சாவடி தலைமை அதிகாரியின் கையெழுத்துப் போட வேண்டியது கட்டாயமாகும்.

ஆனால், இந்த வாக்குச்சாவடியில் வாக்குச்சீட்டுகளில் தலைமை அதிகாரி கையெழுத்துப் போடாமல் வெறும் சீல் மட்டும் வைத்து ஓட்டுப்போட அனுமதித்துள்ளார். இதுபோல் 130 வாக்குச்சீட்டுகளில் கையெழுத்தில்லாமல் ஓட்டுப்போட்டுள்ளனர். கையெழுத்து இல்லாமல் உள்ள வாக்குகள் நிராகரிக்கப்படுமா? செல்லுபடியாகுமா? என்று தெரியவில்லை. திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களில் எல்லாம் ஆளுங்கட்சியினர் அதிகாரிகளையும், காவல்துறையினரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு திமுகவின் வெற்றியை தடுக்கப் பார்க்கின்றனர்.

salem district election officers not signature the ballot box dmk candidate

இன்னொரு வாக்குச்சாவடியில், ஸ்டாம்ப் பேடில் அதிக தண்ணீர் ஊற்றி சீல் வைக்க அனுமதித்துள்ளனர். அதனால் ஓரிடத்தில் சீல் வைக்கப்பட்டு, வாக்குச்சீட்டை மடிக்கும்போது மற்றொரு சின்னத்தின் மீது பதிகிறது. இதுபோன்ற குழப்பமான வாக்குகள் தள்ளுபடி செய்யப்படும் என்பதற்காகவே ஆளுங்கட்சியினர் திமுகவினரின் வெற்றியை பறிக்கும் நோக்கத்துடன், புதுப்புது திருட்டுத்தனங்களை செய்து வருகின்றனர். வெள்ளியம்பட்டி வாக்குச்சாவடியில் நடந்த முறைகேடு குறித்து உயர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்படும்,'' என்றார்.

இதுகுறித்து வெள்ளியம்பட்டி வாக்குச்சாவடி தலைமை தேர்தல் அலுவலர் எட்வின் கூறுகையில், ''இந்த வாக்குச்சாவடிக்கு வந்த பிறகு நேற்று முன்தினம்(ஞாயிறு) இரவே 200- க்கும் மேற்பட்ட வாக்குச்சீட்டுகளில் கையெழுத்துப் போட்டிருந்தேன். விஜயகுமார் மிகைப்படுத்திக் கூறுகிறார். சுமார் நாற்பது நாற்பத்தைந்து வாக்குச்சீட்டுகளில்தான் என் கையெழுத்து இல்லாமல் இருக்கும் என நினைக்கிறேன். அவர் இதுபற்றி என்னிடம் புகார் சொன்னபிறகு, மற்ற வாக்குச்சீட்டுகளில் கையெழுத்திட்ட பிறகே வாக்காளர்களிடம் ஓட்டுச்சீட்டுகளை வழங்கினேன். நான் சந்திக்கும் பத்தாவது தேர்தல் பணி இது. இதற்கு முன்பு இதுபோன்ற தவறு நடந்ததில்லை,'' என்றார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மிகச்சொற்பமான வாக்குகளே, வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக உள்ள நிலையில், தேர்தல் அலுவலர்களின் சிறு கவனக்குறைவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது.