Skip to main content

குடும்ப அரசியல் ஏன் செய்கிறார்கள் என்றால்... மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

திமுக குடும்ப அரசியல் செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் விளக்கம் அளித்துள்ளார்.


திமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் வாழ்க்கை வரலாறு குறித்த, 'திராவிட இயக்கத்தில் என் பயணம்' என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா, சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 17, 2019) நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட்டார். மாநில துணைத்தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் முதல் நூலைப் பெற்றுக்கொண்டார்.


விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியது: 


தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்கள் எல்லாம் அரசாங்கம் சூட்டிய பெயரால் வழங்கி வரும்போது சேலம் மட்டும், வீரபாண்டியார் மாவட்டம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த மாவட்டத்தையே தன்னுடைய கைக்குள் வைத்திருந்தவர் வீரபாண்டியார். அவர் எழுதிய இந்த நூல், அவர் இருக்கும்போதே வெளிவந்திருக்க வேண்டும். அவர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு இந்நூல் வெளிவருவது வருத்தம் தருவதாக உள்ளது. இந்நூலை வாசிக்கும்போது அந்த வருத்தம் விலகி, மகிழ்ச்சியும், பெருமையும் பூரிப்பும் புளகாங்கித உணர்வும், ஏன்... நம்மையே அறியாமல் ஒரு வீரமும் வந்து கொண்டிருக்கிறது.

salem district dmk meeting veerapandi book release function dmk mk stalin speech


திமுக வரலாற்றை, வீரபாண்டியார் இல்லாமல் எழுத முடியாது. அவருடைய வரலாறே திமுகவின் வரலாறுதான். 1956ம் ஆண்டு பூலாவரி கிராமத்தில் கிளைக்கழகம் தொடங்கியது முதல் 2013ம் ஆண்டு மறைகின்ற வரை ஒரே இயக்கம், ஒரே கொடி, ஒரே சின்னம் என்று லட்சியத்தோடு வாழ்ந்தார். இந்த நூலை அனைவரும் வாங்கிப் படித்தால்தான் வீரபாண்டியாரின் தியாகத்தை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.


இன்றைக்கு மிகப்பெரிய சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது மிசா. நான் மிசாவில் இருந்தேனா இல்லையா என்பது இந்த நாட்டில் விவாதம் ஆகிக்கொண்டு இருக்கிறது. எதை விவாதிப்பது என்ற விவஸ்தையே இந்த நாட்டில் இல்லை. நான் சிறையில் இருந்தேனா இல்லையா என்பதெல்லாம் விவாதிக்க வேண்டிய தலைப்பா? திமுகவைச் சேர்ந்தவரா இல்லையா என்பது எவ்வளவு முட்டாள்தனமான விவாதமோ, அத்தகைய முட்டாள்தனமான விவாதம்தான் நான் மிசாவில் இருந்தேனா இல்லையா என்பதும். அதனால்தான் பொதுக்குழுவில், மிசாவில் இருந்தேன் என்று சொல்லிக் கொள்வதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று சொன்னேன். 


இதனை எதற்காகச் சொல்கிறேன் என்றால், நான் மட்டுமல்ல. தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறை வைக்கப்பட்டோம். நாங்கள் சென்னை சிறையில் இருந்தோம் என்றால் வீரபாண்டியார், சேலம் சிறையிலும், பின்னர் மாற்றலாகி மதுரை சிறையிலும் இருந்தார். 1975ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்ப டுத்தப்பட்டது. நாட்டில் உள்ள பல தலைவர்கள் காராக்கிரகத்தில் அடைக்கப்பட்டனர். அந்த நெருக்கடி நிலையை எதிர்த்து முதல் முதலில் குரல் கொடுத்த இயக்கம் திமுக. 


தலைவர் கலைஞர்தான் முதன்முதலில் எதிர்த்துக் குரல் கொடுத்தார். டெல்லியில் இருந்து சில தூதுவர்கள் வந்தனர். ''அன்னை இந்திராகாந்தி கொண்டு வந்திருக்கும் நெருக்கடி நிலையை நீங்கள் எதிர்க்கக் கூடாது. ஆதரிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் எதிர்க்கக் கூடாது. நீங்கள் ஆதரித்தால் மகிழ்ச்சி; ஆதரி க்கவில்லை என்று நாங்கள் கவலைப்பட மாட்டோம். நீங்கள் எதிர்க்காமல் இருந்தால் உங்கள் ஆட்சி தொடர்ந்து தமிழ்நாட்டில் இருக்கும். இல்லாவிட்டால், உங்கள்  ஆட்சியை அடுத்த வினாடியே கவிழ்த்துவிடுவோம்,'' என்று தூதர்கள் சொன்னார்கள். 

அவர்களிடத்தில், 'தந்தை பெரியார், பேரரிஞர் அண்ணா ஆகியோரால் வளர்க்கப்பட்டவன் நான். ஆட்சியென்ன? எங்கள் உயிரே போனாலும் நாங்கள் என்றைக்கும் சர்வாதிகாரத்திற்கு துணை நிற்க மாட்டோம். ஜனநாயகத்தின் பக்கம்தான் நிற்போம்' என்று தலைவர் கலைஞர், அந்த தூதர்களிடம் சொல்லி அனுப்பினார். அதற்குப் பிறகு சென்னை கடற்கரையில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் நெருக்கடி நிலையை எதிர்க்கும் தீர்மானத்தை கலைஞர் முன்மொழிந்தார். மக்களும் வழிமொழிந்தனர். அதையடுத்து 1976ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.


கழகத்தைச் சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டனர். நான் பிப். 2ம் தேதி கைது செய்யப்பட்டேன். பிப். 6ம் தேதி, தனது மூத்த மகள் மகேஸ்வரி - காசி ஆகியோர் திருமணத்தை தலைவர் கலைஞர் தலைமையேற்று நடத்தி வைக்க வேண்டும். அதற்குள் ஆட்சி கலைக்கப்பட்டு நாங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டோம். யாரெல்லாம் முன்னணியினரோ அவர்களை எல்லாம் கைது செய்கிறார்கள். இந்தநிலையில் வீரபாண்டியாரை அழைத்த கலைஞர், இந்த திருமணத்தை நடத்தி வைக்க நான் வந்தால் உடனே உன்னை கைது செய்து விடுவார்கள். அதனால் முன்னணியினரை வைத்து நீயே நடத்தி விடு என்று சொன்னார். 


இதை ஏற்றுக்கொள்ளக்கூடியவரா வீரபாண்டியார்? எது நடந்தாலும் பரவாயில்லை. நீங்கள் வந்துதான் ஆக வேண்டும் என்கிறார். ஆனால் ஒரு சுப நிகழ்ச்சி நடைபெறும்போது தன்னால் எந்த பிரச்னையும் வந்து விடக்கூடாது என்பதால் கலைஞர் கலந்து கொள்ளவில்லை. திருமணம் முடிந்ததும் மணமக்கள் சொந்த ஊருக்கு மறுவீட்டுக்குச் செல்வதற்கு முன்னால் வழிமறிக்கப்பட்டு, வீரபாண்டியார் கைது செய்யப்பட்ட காட்சி கண்ணீரை வரவழைக்கிறது. 


அவரை மட்டுமின்றி தாயார், மனைவி, சகோதரி, மகளின் கணவர் ஆகியோரையும் கைது செய்து, சித்ரவதைகளை செய்தனர். வீரபாண்டியார் மீது மட்டும் 50 பொய் வழக்குகள் போடப்பட்டன. இவ்வளவையும் படிக்கும்போது வீரபாண்டியார் மீது மட்டுமல்ல; அவருடைய குடும்பத்தினர் மீதே மரியாதை ஏற்படுகிறது. 


திமுக குடும்ப அரசியல் செய்கிறது என்று குற்றம் சாட்டுபவர்கள் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும். குடும்ப அரசியல் ஏன் செய்கிறார்கள் என்றால், குடும்பம் குடும்பமாக இக்கட்சிக்கு உ-ழைத்தார்கள். குடும்பம் குடும்பமாக பாடுபட்டார்கள். குடும்பம் குடும்பமாக சிறைக்குச் சென்றார்கள். அந்தக்காலக்கட்டத்தில் சேலத்திற்குள் நுழையக்கூடாது என்று வீரபாண்டியாருக்கு தடை விதித்தனர்.


அப்படி தடை விதிக்கப்பட்ட வீரபாண்டியார்தான், சேலம் மாவட்டத்தையே வீரபாண்டியார் மாவட்டம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த இயக்கத்தை வளர்த்தார். இதையெல்லாம் அறிந்து கொள்ள நீங்கள் இந்த நூலை வாங்கிப்படிக்க வேண்டும். இதில் கலைஞரின் வரலாறும் இருக்கிறது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்