கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையொட்டி, தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட சமூக விரோத கும்பல், சேலம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அண்மையில் கருமந்துறை மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பலை கைது செய்தனர்.

Advertisment

இதையடுத்து சேலம் மாவட்டம் காரிப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், வீரகனூர் உள்ளிட்ட காவல்துறை எல்லைகளுக்கு உட்பட்ட கல்வராயன் மலை, அறுநூற்றுமலை பகுதிகளில் கடந்த சில நாள்களாக கள்ளச்சாராய வேட்டையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

salem district corona curfew police raid in mountain

காரிப்பட்டி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட அறுநூற்றுமலையில் உள்ள கிராமங்களில் வியாழக்கிழமை (ஏப். 9) ஆய்வாளர் (பொறுப்பு) உமா பிரியதர்ஷினி தலைமையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அறுநூற்றுமலை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (44) என்பவர், விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அவருடைய வீட்டில் சோதனை செய்தபோது அங்கிருந்து அனுமதி பெறாத நாட்டுத்துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. உரிமமின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததாககிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்தனர். சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கான ஊறல் குறித்தும் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment