Skip to main content

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு 'கபசுர' குடிநீர்! 

Published on 01/07/2020 | Edited on 01/07/2020

 

salem district containment zones peoples kabasura kudineer corporation

 

சேலத்தில், நோய்த்தொற்று அபாயமுள்ள 17 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் இலவசமாக கபசுர குடிநீர் விநியோகம் செய்து வருகிறது.

 

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று நோய்த்தடுப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பில் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவதோடு, அவர்கள் வசிக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட 15 கோட்டங்களில் 17 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதிகளில் தீவிர நோய்த்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தினமும் 5 வேளைகளில் கிருமி நாசினி மருந்து தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 

அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திடும் வகையில் ஹோமியோபதி மாத்திரைகள் மற்றும் வீடுகளைத் தூய்மையாக பராமரிப்பதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் பிளீச்சிங் பவுடர்கள் மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

 

கட்டுப்படுத்தப்பட்ட 17 இடங்களிலும் வெளியாள்கள் உள்ளே செல்வதற்கும், அப்பகுதிகளில் வசிப்பவர்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காகவோ அல்லது பிற எவ்வித நிகழ்விற்காகவும் தங்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பால் மற்றும் மருந்து பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், அஸ்தம்பட்டி மண்டலம் 6- ஆவது கோட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான பிரகாசம் நகரில் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கும் சேவையை ஆணையர் சதீஷ் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30- ஆம் தேதி) துவக்கி வைத்தார். அனைத்துக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

 

http://onelink.to/nknapp

 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொருட்டு கபசுர குடிநீரை பருகியும் மற்றும் தங்களுக்கு வழங்கப்படும் ஹோமியோபதி மாத்திரைகளை உரிய இடைவெளியில் உட்கொண்டு, நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

 

 

Next Story

மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கல்; கிடங்கு உரிமையாளர் உள்பட 5 பேர் கைது

Published on 13/10/2022 | Edited on 13/10/2022

 

 

Hoarding bundles of gutka; 5 people including warehouse owner arrested!


சேலத்தில் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கிடங்கில் ரகசியமாகப் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக கிடங்கு உரிமையாளர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் அன்னதானப்பட்டி மூலைப்பிள்ளையார் கோயில் அருகே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி, விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

 

அதன்பேரில், அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவருக்குச் சொந்தமான ஒரு கிடங்கில் சோதனை செய்தனர். அந்த கிடங்கில் மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அங்கிருந்து மொத்தம் 30 மூட்டைகளில் குட்காவை காவல்துறையினர் கைப்பற்றினர். அவற்றின் மொத்த மதிப்பு 5 லட்சம் ரூபாய். 

 

புகையிலை பொருட்களை கடை கடைக்கு ரகசியமாக விற்பனை செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

 

இது தொடர்பாக செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த ஹிதீஷ்குமார் (வயது 29), சரவணக்குமார் (வயது 28), வர்ஜிங்ராங் (வயது 24) மற்றும் 17 வயது சிறுவன், கிடங்கு உரிமையாளர் அன்பழகன் (வயது 51) ஆகிய ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

 

அவர்களை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.