Advertisment

ஊரடங்கு தளர்வு: உணவகங்கள் முழு நேரமும் இயங்கும்; கட்டுமான பணிகளுக்கு அனுமதி; தனி கடைகளுக்குத் தடை இல்லை!

Salemcollectoroffice

Advertisment

கரோனா நோய்த்தொற்று அபாயத்தைக் கட்டுக்குள் கொண்டு வர, தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் மே 3 ஆம் தேதி வரை ஏற்கனவே நீட்டிக்கப்பட்டிருந்த ஊரடங்கை, மேலும் இரு வாரங்களுக்கு அதாவது மே 17 ஆம் நள்ளிரவு 12 மணி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் தடை உத்தரவு அமலில் உள்ள காலத்தில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராமன், சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:

தடை உத்தரவு மே 17 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் உள்ளதால் இக்காலக்கட்டத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றாகக் கூடுவதும், பொது இடத்தில் நடமாடுவதும் தடை செய்யப்படுகிறது.

Advertisment

மக்கள் அத்தியாவசிய, அவசரத் தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்படுகிறது.

இந்த உத்தரவை மீறி வெளியே தேவையின்றி நடமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா நோய்த்தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும்.

அதேநேரம் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் பின்வரும் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. அதன் விவரம்...

S.A.Raman District Collector, Salem

சேலம் மாநகராட்சி, நகராட்சிக்கு வெளியே உள்ள பகுதிகளில் ஜவுளித்துறை உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சாலைகளும் குறைந்தபட்சம் 20 பணியாளர்களுடன் முதல் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை உள்ள பேரூராட்சிகளில் மட்டும், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கேற்ப ஜவுளித்துறை நிறுவனங்களை 50 சதவீத பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள், தொழில் நகரியங்கள், தொழில் பேட்டைகள் ஆகியவை 50 சதவீத பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும். அதேநேரம் நகரப் பகுதிகளில் உள்ல தொழிற்பேட்டைகளில், ஜவுளி நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.

நகரப்பகுதிளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப 50 சதவீத பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

ஹார்டுவேர் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.

கிராமப்புறங்களில் உள்ள நூற்பாலைகள் சுழற்சி முறையில் சமூக இடைவெளியுடன் 50 சதவீத பணியாளர்களைக் கொண்டு செயல்படலாம்.

நகரப்பகுதிகளில் உள்ள தோல் பொருள்கள், ஆடை ஏற்றுமதிக்கான டிசைனிங் மற்றும் சாம்பிள்கள் உருவாக்கும் நிறுவனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, 30 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறைந்தபட்சம் 20 ஊழியர்கள் முதல் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.

நகர்ப்புறங்களில் கட்டுமானப்பணிகளைப் பொருத்தவரை, பணிபுரியும் இடங்களிலேயே பணியாளர்கள் இருக்கும்பட்சத்தில் மட்டும் அனுமதிக்கப்படும். பணியாளர்களை ஒரே ஒருமுறை மட்டும் வேறிடத்தில் இருந்து அழைத்து வர அனுமதிக்கப்படும்.

அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப்பணிகள், சாலைப்பணிகள் அனுமதிக்கப்படும்.

பிளம்பர், எலக்டிரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் அனுமதி க்கப்படுவர்.

மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஆகியோரின் சிறப்புத் தேவைகளுக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.

அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருள்கள், சானிடரிவேர், மின்சாதன விற்பனைக் கடைகள் ஆகியவை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமானப் பொருள்களை எடுத்துச்செல்ல எந்த விதமான தடையும் இல்லை.

மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப்பொருள்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுதுநீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக்கடைகள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். மின் வணிக நிறுவனங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம்.

நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள பெரு வணிக வளாகங்கள் (மால்கள்), வணிக வளாகங்கள் தவிர்த்து மற்ற நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகள் நீங்கலாக இதர பகுதிகளில் உள்ள அனைத்து தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் சூழ்நிலைக்கேற்ப செயல்பட அனுமதிக்கப்படும்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையர்களும் அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியைப் பின்பற்றியும், போதுமான கிருமிநாசினியைப் பயன்படுத்தியும், தொழிலாளர்கள் பாதுகாப்பாகப் பணியாற்றுவதைக் கண்காணிப்பதையும் உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

ஏற்கனவே அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்துத் தளர்வுகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ள வேளாண்மைப் பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள், தொழில் மற்றும் வணிக செயல்பாடுகளும், மருத்துவப் பணிகள் மற்றும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ஏடிஎம், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எவ்வித தங்குதடையுமின்றி தொடர்ந்து முழுமையாகச் செயல்படலாம்.

கனிமம், சுரங்கப்பணிகள், கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பொருள்களை வழங்கும் செங்கல் சூளைகள், கல் குவாரிகள், எம்&சாண்ட், கிரஷர்கள் மற்றும் அவற்றுக்கான போக்குவரத்து ஆகியன செயல்படவும் அனுமதிக்கப்படுகிறது.

பெரும் தொழிற்சாலைகளும், ஐ.டி. நிறுவனங்களும், கட்டுமானப் பணிகளுக்கும், பணிகளைத் தொடங்க மாவட்ட ஆட்சியர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் இணைய வழியில் விண்ணப்பித்து பணியாளர் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டுகள் பெற வேண்டும்.

நகரப் பகுதிகளில் பணியாளர்களைத் தாங்கள் இயக்கும் பிரத்யேக பேருந்துகள், வேன்கள் மூலம் பணிக்கு அழைத்து வரலாம். அவ்வாறு அழைத்து வரும்போது அவ்வாகனங்களில் 50 சதவீத அளவிற்கு மட்டுமே தக்க தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்து, பணியாளர்களை அழைத்து வர வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், கிராமப்புறத் தொழில்கள், தனிக்கடைகள் ஆகியவை செயல்பட தனி அனுமதி தேவையில்லை.

மத்திய அரசு, மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும். அதன் விவரம் வருமாறு:

பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள்.

வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.

http://onelink.to/nknapp

திரையரங்குகள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத்தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.

அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

பொதுமக்களுக்கான விமான, ரயில், பொது பேருந்து போக்குவரத்து.

டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா.

மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.

மாநிலங்களுக்கு இடையேயான பொதுமக்கள் போக்குவரத்து.

தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.

மால்கள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் இயங்கத் தடை.

குளிரூட்டப்பட்ட காட்சி அறைகள், நகை விற்பனை கடைகள், துணிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் இயங்க தடை.

இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.

அரசு வழங்கியுள்ள இந்த நடைமுறைகளைப் பின்பற்றி, மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, தொழிற்சாலைகளுக்கு தக்க அனுமதி வழங்கி, 6.5.2020 முதல் தொழிற்சாலைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதோடு, நோய்த்தொற்றின் பரவலைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனவும், நோய்த்தொற்று குறைய குறைய அரசு மேலும் பல தளர்வுகளை அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

collector corona virus issue salem district
இதையும் படியுங்கள்
Subscribe