Skip to main content

சேலத்தில் வெளிநாட்டினர் இருந்தால் தகவல் சொல்லுங்க! ஆட்சியர் ராமன் வேண்டுகோள்!!

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

 


கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, சேலத்தில் வெளிநாட்டினர் யாராவது தங்கியிருந்தால் அவர்களே முன்வந்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு கடந்த ஜனவரி 28ம் தேதிக்குப் பிறகு யாரேனும் வந்திருந்தால், அவர்கள் தாமாகவே சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்புக்கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் சேலம் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறைக்கு 0427-2450022, 0427-2450023, 0427-2450498 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

 

salem district collector




அவ்வாறு தகவல் தெரிவித்தால்தான், அவர்களின் உடல்நலன் மட்டுமின்றி, அருகில் உள்ளவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் நலன்களையும் பாதுகாக்க உரிய மருத்துவப் பரிசோதனைகளையும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். 


வெளிநாடுகளில் இருந்து சேலம் மாவட்டத்தில் இதுவரை 247 நபர்கள் வரப்பெற்று, அவர்களை ஏற்கனவே மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மருத்துவப் பரிசோதனையில் அவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற எந்த வித உபாதைகளும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.


அவர்கள் அனைவரும் 14 நாள்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, தற்போது நலமாக உள்ளனர். கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு பாதுகாப்பிற்காக சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும், அறிவுரைகளையும் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.


இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்