Advertisment

சேலத்தில் தனி நபர் கடைகள் திறக்க மே 17 வரை தடை! 

salem district collector and officers meeting shop closed coronavirus

Advertisment

சேலத்தில், கரோனா தொற்று அபாயம் உள்ளதால் தனிநபர் கடைகளை மே 17- ஆம் தேதி வரை திறக்கக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24- ஆம் தேதி மாலை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் 17- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

எனினும், நோய்த்தொற்று குறைவாக உள்ளதால் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் ஊரடங்கு உத்தரவுக்குச் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Advertisment

தனிநபர் கடைகள் இயங்கலாம் என அறிவிப்பு வெளியானதால், சேலத்தில் பெட்டிக்கடைகள், செல்போன் ரீசார்ஜ் கடைகள், மின்சாதனங்கள் பழுதுபார்க்கும் கடைகள் அனைத்தும் கடந்த இரண்டு நாள்களாக முழுவீச்சில் திறக்கப்பட்டன. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், பல இடங்களிலும் மக்கள் சமூக விலகல் விதியைப் பின்பற்றாமல் இருந்தனர். இதனால் நோய்த்தொற்று அபாயம் உள்ளதாகச் சுகாதாரத்துறை எச்சரித்தது.

இதையடுத்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ராமன் செவ்வாய்க்கிழமை (மே 5- ஆம் தேதி) ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில், மே 17- ஆம் தேதி வரை தனி நபர் கடைகளைத் திறக்க அனுமதி இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது.

அதேபோல், அனைத்துச் சமய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தவும் அனுமதி இல்லை.

செவ்வாய்ப்பேட்டை லீ பஜாரில் உள்ள கடைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அனைத்து விதிகளையும் பின்பற்றி, ஒருநாள் வலப்புறமும், அதற்கு அடுத்த நாள் இடப்புறமும் உள்ள கடைகள் மட்டும் மதியம் 02.00 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது. உணவகங்களில் பார்சல் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

இந்த அறிவிப்புக்குப் பிறகு புதன்கிழமை (மே 6- ஆம் தேதி) காய்கறி, மளிகைக் கடைகள் தவிர பிற கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் கடந்த இரு நாட்களாகச் சாலைகளில் இருந்த வாகன நெரிசல் கணிசமாகக் குறைந்தது.அதேநேரம், ஆட்சியரின் தடை உத்தரவை மீறி வாகன பழுதுபார்ப்பு பட்டறைகள், மின்சாதன பொருள் கடைகள் பரவலாகத் திறந்து இருந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் தடையை மீறி செயல்பட்ட 5 கடைகளை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்தனர். மாவட்ட நிர்வாகத்தின் திடீர் அறிவிப்புகளால் எப்போது கடை திறக்க வேண்டும் என்ற தகவல் சரியாகத் தெரியாததால் கடைகளைத் திறப்பதில் வணிகர்களிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது.

coronavirus District Collector Meeting prevention Salem
இதையும் படியுங்கள்
Subscribe