Skip to main content

போதை ஊசி போட்டுக்கொண்ட சிறுவன் பலி; இரண்டு மருந்துக் கடைகள் மீது வழக்கு!

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

 

salem district child incident medical shops police


சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவருடைய மகன் அஜித்குமார் (17). கடந்த 15- ஆம் தேதி தனது நண்பர்கள் மூன்று பேருடன் அப்பகுதியில் உள்ள கரட்டுக்குச் சென்றிருந்தான். சிறிது நேரத்தில் வீட்டிற்கு போதையேறிய நிலையில் தள்ளாடியபடி வந்துள்ளான். தனக்கு மயக்கம் வருவதுபோல் இருப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளான் அஜித்குமார். இதையடுத்து பெற்றோர் 108 ஆம்புலன்சுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனம் வீட்டுக்கு வந்து சேர்ந்த நிலையில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
 


இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல்நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், சிறுவன் அஜித்குமார், தனது நண்பர்களுடன் போதைக்காக வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டப் பயன்படுத்தப்படும் சொலூசன், பெயிண்டில் கலப்பதற்காக பயன்படுத்தக் கூடிய தின்னர் திரவம், தூக்க மாத்திரை ஆகியவற்றை நீரில் கலக்கிக் குடித்துள்ளதோடு, போதை ஊசியும் உடம்பில் செலுத்தி இருப்பது தெரிய வந்தது.

சம்பவத்தன்று அஜித்குமாருடன் சுற்றித்திரிந்த மூன்று நண்பர்களையும் காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அவர்களுக்கு போதை மாத்திரை, சிரிஞ்சுகள், போதை மருந்து ஆகியவை வழங்கியது யார்? எப்படிப் பெற்றார்கள்? என்ன வகையான போதை மருந்து பயன்படுத்தப்பட்டது? என்பது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். சிறுவர்கள் கொண்டலாம்பட்டி, தாதகாப்பட்டி கேட் பகுதிகளில் உள்ள இரண்டு மருந்து கடைகளில் தூக்க மாத்திரை, போதை மருந்துகளை வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. மருந்துக் கடை ஊழியர்கள் சிறுவர்களிடம், இருதய நோயாளிகள் வலி தெரியாமல் இருப்பதற்காக விழுங்கக்கூடிய, 160 ரூபாய் மதிப்புடைய மாத்திரைகளை 1,600 ரூபாய்க்கு விற்றுள்ளது தெரிய வந்துள்ளது. 
 

 


இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மண்டல மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் குருபாரதி மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் ரேகா, மாரிமுத்து ஆகியோர் திங்களன்று (மே 18) சம்பந்தப்பட்ட மருந்துக் கடைகளில் நேரில் விசாரணை நடத்தினர். அவர்கள் சிறுவர்களிடம் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமலேயே போதை மாத்திரை, ஊசி மற்றும் மருந்துகளை விற்றிருப்பது உறுதியானது. மேலும் அவ்விரு கடைகளில் இருந்தும் விற்கப்படாமல் உள்ள சில மருந்து, மாத்திரைகளை ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர். அந்த இரு மருந்துக் கடைகள் மீது மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, அன்னதானப்பட்டி காவல்துறையினர், மருந்துக் கடைகளின் உரிமையாளர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். இறந்த சிறுவனின் உடற்கூறாய்வு அறிக்கை வந்ததும், மருந்துக் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது காவல்துறை.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா? -  மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dr Radhika | Brain | Youngsters  

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா என்ற கேள்விக்கு பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் பதிலளிக்கிறார். 

முன்பெல்லாம் குழந்தைகள் தவறு செய்யும்பொழுது அடித்து திருத்துவது இயல்பாக இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறி இருந்தாலும் வேறு வழிகளில் அவர்களை திருத்தி முறைப்படுத்தலாம். உதாரணத்திற்கு வாரம் முழுக்க வீட்டுப்பாடம் செய்தால் ஸ்டார் கொடுத்து 10 ஸ்டார்ஸ் வாங்கும்போது பிடித்த சினிமாவிற்கு கூட்டி செல்வது, பிடித்த சாக்லேட் வாங்கி கொடுப்பது என்று அவர்களை நெறிப்படுத்தலாம். தவறுகள் செய்யும்போது ஓரிரண்டு நாள் பாக்கெட் மணி கட் செய்வது, மொபைல் போன் தடை செய்வது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் யாரையுமே அடிப்பது என்பது தவறு. அது ஒருவகை தண்டனை தான். அது  அவர்களின் சுய நம்பிக்கையை இழக்க செய்யும். 

குழந்தைகளும் ஒருவித கவலை உணர்விலிருந்து வெளி வரவே மொபைல் போன் மீது சார்ந்து இருக்கிறார்கள். ஒரு தவறான விசயம் எந்தளவு அடிமைப்படுத்துகிறதோ அந்த அளவு மொபைல் திரையை பார்ப்பதில் அவர்களுக்கு ஏற்படுகிறது. இது டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் என்று பல்வேறு மன நோய்களை கொடுக்கிறது. இது கூடவே சரியான உணவு பழக்கமும் தூக்கமுமின்றி வேலை பார்க்கும் இளைஞர்களையும் கூட சேர்த்து பாதிக்கிறது. டைப் 2 டயாபெட்டீஸ் நோய் தாக்குமளவு இருக்கிறது. இதற்கு தீர்வாக குழந்தைகளிடம் குடும்பமாக சேர்ந்து நேரம் ஒதுக்கி பிடித்த படம் பார்ப்பது, விளையாடுவது போன்று நேரம் செலவழிக்கலாம். ஆனால் இன்றைய தினங்களில் பெற்றோர்களும் வேலை பார்ப்பதால் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிவதில்லை. 

மொபைல், இன்டர்நெட் அடிமை ஆனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் இருக்கிறது. ஆல்கஹால் கூட வாங்காமல் தடுத்து ஒரு வகையில் முழுமையாக நிறுத்த முடியும். இதுவே மொபைல் என்று வரும்போது அவர்களின் தினசரி தேவைக்கும் அது அத்தியாவசியமாக இருப்பதால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். மிக குறைந்த நேரத்தில் மகிழ்ச்சியை கொடுப்பதால் தான் போன் பார்ப்பது என்பது எளிதாக இருக்கிறது. இதுவே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். எனவே இதுபோல பள்ளிகளிலும் போன் பயன்படுத்தாமல் இருக்கவென்று நாட்கள் ஒதுக்கி வேறு விதமான பயிற்சிகளை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். மன நிம்மதிக்காக போன் பார்க்கும் நிலையிலிருந்து மாற வேறு விதமான ஃபன் ஆக்டிவிட்டிகளில் ஈடுபடலாம். 

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார்.