/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/salem3456.jpg)
இளம்பெண்ணின் செல்போன் பேச்சில் மதிமயங்கிய வாலிபர், அவரால்தான் தனக்கு ஹெச்ஐவி நோய்த்தொற்று ஏற்பட்டதாகக் கூறி, சேலம் நீதிமன்ற வளாகத்தில் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அஸ்தம்பட்டி அருகே, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திங்களன்று (ஜன.11) மாலை இளம்பெண்ணும், வாலிபரும் தகராறில் ஈடுபட்டிருந்தனர். ஒருவருக்கொருவர் சரமாரியாக ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த பொதுமக்கள், இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கிவிட்டனர். ‘ஏன் தகராறு செய்கிறீர்கள்’ என்று அந்த வாலிபரிடம் கேட்டபோது, ''எனக்கு ஹெச்ஐவி நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது, எனக்கு நோயைப் பரப்பியது இந்தப் பெண்தான். என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டாள்,'' என்றும் குற்றம் சாட்டினார்.
விசாரணையில் அந்த வாலிபர், சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. அவர், சேலத்தில் உள்ள ஒரு பிரபலமான நகைக்கடையில் நகை சீட்டு போட்டுள்ளார். நகை சீட்டு பிரிவில் வேலை செய்து வந்த இளம்பெண், மாதந்தோறும் நகை சீட்டு தவணை செலுத்துமாறு வாலிபருக்கு செல்போனில் தொடர்புகொண்டு கேட்டுள்ளார். மேலும், அவ்வப்போது புதிதாக வரும் நகை சீட்டுத் திட்டங்கள் பற்றியும் கூறியுள்ளார்.
செல்போனில் இளம்பெண்ணின் குரலைக் கேட்ட அந்த வாலிபர், குரல் இனிமையாக இருக்கிறது. பின்னணி பாடகி சித்ராவின் குரல் போல் இருக்கிறது என்றெல்லாம் அசடு வழிந்துள்ளார். இப்படியே நீண்ட அவருடைய பேச்சு, இருவருக்குள்ளும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது அந்தப் பெண், தனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்றும், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வாழ்வதாகவும், தற்போது சேலம் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
சின்ன வயதிலேயே எனக்கு திருமண வாழ்வு முடிந்து விட்டது என்றும் அந்த இளம்பெண் அழுது புலம்பியுள்ளார். ஏற்கனவே அவரின் குரலில் வழுக்கி விழுந்துவிட்ட வாலிபர், “உனக்கு விவாகரத்து கிடைத்தவுடன், நானே திருமணம் செய்துகொள்கிறேன். கடைசி வரை உன்னை கண்கலங்காமல் பார்த்துக்கொள்வேன்” என்றும் உறுதி அளித்திருக்கிறார். இதனால் அவர்களிடையே அந்தரங்க சமாச்சாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு நெருக்கம் அதிகரித்தது.
இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டனர். ஒரு தனியார் விடுதியில் தனிமையில் சந்தித்துக்கொண்ட அவர்கள், அங்கு 'நெருக்கமாக' இருந்துள்ளனர். அதற்கு அடுத்த சில மாதங்களில் வாலிபருக்குத் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. தனியார் மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தபோது, வாலிபருக்கு ஹெச்ஐவி நோய்த்தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
மனம் உடைந்த அந்த வாலிபர் இளம்பெண்ணை சந்தித்து, 'எனக்கு எய்ட்ஸ் நோயைபரப்பி விட்டுட்டியே' எனக் கேட்டு தகராறு செய்துள்ளார். ஜன. 11ம் தேதியன்று, விவாகரத்து வழக்குக்காக அந்த இளம்பெண் நீதிமன்றம் வந்திருப்பதை அறிந்துகொண்டு வாலிபரும் அங்கு வந்துள்ளார். நீதிமன்ற வளாகத்திலேயே இளம்பெண்ணிடம், 'எனக்கு நோய் வந்ததற்கு நீதான் காரணம். இன்னும் கொஞ்ச காலத்தில் நான் செத்துவிடுவேன். என் சாவுக்கும் நீதான் காரணம்,' என்று கூறி ஆபாச வார்த்தைகளால் சரமாரியாக திட்டியுள்ளார். பதிலுக்கு அந்தப் பெண்ணும் அவரை திட்டித்தீர்த்துள்ளார்.'எனக்கு எய்ட்ஸ் இருக்கிறதா இல்லையா என்றே தெரியாது. அப்படி இருக்கும்போது நான்தான் காரணம் என்று ஏன் கூறுகிறாய்?' என்றும் அந்தப் பெண் கேட்டுள்ளார்.
அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் சத்தம் கேட்டு வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். அவர்களிடம் விசாரித்தபோதுதான் மேற்காணும் விவரங்கள் தெரிய வந்தன. பிறகு, கடைசியில் இருவரையும் சமாதானப்படுத்திய பொதுமக்கள், தனித்தனியாக பிரித்து அனுப்பி வைத்தனர்.
ஆணோ, பெண்ணோ தகாத உறவு கொண்டால் இத்தகைய சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடும். அதனால் இருபாலரும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்வதே உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் நல்லது என்று பொதுமக்கள் கூறியபடி அங்கிருந்து கலைந்து சென்றனர். அதேநேரம், அந்தப் பெண்ணும் உடனடியாக தன்னை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வது அவசியம் என்றும் கூறினர். இச்சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)