
பூர்வீகச் சொத்துகளை விற்று பாகம் பிரித்துத் தராமல், முட்டுக்கட்டையாக இருந்ததால் உடன் பிறந்த அண்ணன் என்றும் பாராமல் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் அருகே உள்ள சித்தனூரைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 40). இவருடைய மனைவி ரேவதி. செல்வம், வெள்ளிக் கொலுசுத் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு 5 சகோதரிகள், 3 சகோதரர்கள் உள்ளனர். இவர்களுடைய தாயார் பெரிய தாய் (வயது 70). அவர், சொந்த ஊரான கொண்டலாம்பட்டி அருகே உள்ள பெரிய புத்தூரில் கடைசி மகன் சந்தோஷ் (வயது 35) என்பவருடன் வசிக்கிறார். தாயாரை செல்வம் அடிக்கடி சந்திக்கச் செல்வார்.
இந்நிலையில் செல்வம், உறவினர் இல்லத் திருமணம் தொடர்பாக பேசுவதற்காக தாயாரைச் சந்தித்துப் பேச, வியாழக்கிழமை (மார்ச் 18) அவருடைய வீட்டுக்குச் சென்றார். அப்போது அங்கு வந்த அவருடைய கடைசித் தம்பி சந்தோஷ், திடீரென்று நாட்டுத் துப்பாக்கியை எடுத்து அண்ணன் என்றும் பாராமல் செல்வத்தை குறிபார்த்து சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். குண்டடிபட்ட செல்வத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி காவல்நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. சந்தோஷ், ஆத்தூர் அருகே ஓரிடத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். சந்தோஷுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் தாயாருடன் வசித்து வந்தார். கடந்த 2006- ஆம் ஆண்டு, நகைக்காக மூதாட்டி ஒருவரை கொலை செய்த வழக்கில் சந்தோஷ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2015- ஆம் ஆண்டு விடுதலையாகி வெளியே வந்த அவர், கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இந்த வழக்கிலும் கைது செய்யப்பட்ட அவர், பிணையில் வெளியே இருப்பதும் தெரிய வந்துள்ளது.
செல்வம் குடும்பத்திற்குச் சொந்தமாக, 2 வீடு மற்றும் காலி மனை நிலம் உள்ளது. இதைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று சந்தோஷ் அடிக்கடி கேட்டு வந்தார். இதற்கு செல்வமும், மற்ற சகோதரர்களும் மறுப்பு தெரிவித்து வந்தனர். குறிப்பாக செல்வம், எந்த சொத்துகளையும் விற்கக் கூடாது எனக் கடுமையாக முட்டுக்கட்டை போட்டார். கையில் பணம் இல்லாததால், பல இடங்களில் சந்தோஷ் கடன் வாங்கியிருந்தார். ஒருபுறம் கடன் நெருக்கடி அதிகரித்ததும், இன்னொருபுறம் சொத்துகளை விற்க செல்வம் தடையாக இருந்ததும் அவருக்குக் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான், தாயாரை காண்பதற்காக செல்வம் வந்துள்ளதை அறிந்த சந்தோஷ், முயல் வேட்டைக்காக வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தோஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.