
ஆத்தூர் அருகே, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், விவசாயியைக் கட்டையால் அடித்துக் கொன்ற நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கோபாலபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (40). விவசாயி. இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மனைவி, ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். பெரியசாமியின் தாயாரும் இவர்களுடன் வசித்து வந்தார்.
இதே பகுதியில் சந்திரசேகர் (45) என்பவருக்குச் சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. சந்திரசேகரும், பெரியசாமியும் நண்பர்கள். அவர்கள் ஒன்றாக சேர்ந்து அடிக்கடி மது அருந்துவது வழக்கம். இந்நிலையில், ஜன. 29- ஆம் மாலை அவர்கள் சந்திரசேகரின் தோட்டத்தில் அமர்ந்து மது குடித்தனர்.
அப்போது அவர்களுக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அவர்களுக்குள் கைகலப்பு மூண்டது. ஆத்திரத்தில் சந்திரசேகர், அருகில் கீழே கிடந்த கட்டையை எடுத்து பெரியசாமியை சரமாரியாக தாக்கினார். இந்த மோதல் சத்தம் கேட்டு அங்கு வந்த பெரியசாமியின் தாயார், அவர்களைச் சமாதானப்படுத்தி வைத்து, பெரியசாமியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
இந்த மோதலில் பெரியசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது. இரவு நேரம் என்பதால் அவரின் தாயாரும் இதைக் கவனிக்கவில்லை. குடிபோதையில் இருந்ததால் பெரியசாமியும் அப்படியே தூங்கிவிட்டார். இந்நிலையில், ஜன. 30- ஆம் தேதி அதிகாலை எழுந்த பெரியசாமி தாயாரிடம் தண்ணீர் கேட்டு குடித்துள்ளார். அதன்பிறகு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவர், உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மல்லியக்கரை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறை விசாரணையில், பெரியசாமியை சந்திரசேகர் தாக்கியதில் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டு, உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சந்திரசேகரை காவல்துறையினர் கைது செய்தனர்.