குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட தேசிய அளவிலான முக்கியத்துவம் உள்ள பொது விடுமுறை நாள்களில் மருத்துவம், குடிநீர் விநியோகம், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை நிறுவனங்கள் தவிர, மற்ற அனைத்து வர்த்தக, சேவை நிறுவனங்களுக்கும் விடுமுறை விடுவது கட்டாயமாகும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஒரு நிறுவனம் செயல்பட்டே ஆக வேண்டும் எனில், அதற்கு முன்கூட்டியே தொழிலாளர் துறையில் அனுமதி பெற வேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/salem collector555.jpg)
ஆனால் தனியார் வர்த்தக நிறுவனங்கள் பல, லாபம் நோக்கம் கருதியும், சட்ட விதிகளை மீறியும் தேசிய விழா நாள்களின்போதும் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. அதுபோல் விதிகளை மீறி இயங்கும் அலுவலகங்கள், நிறுவனங்கள் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, தொழிலாளர் ஆணையர், அனைத்து மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சேலம் மாவட்டத்தில், குடியரசு தினமான ஜன. 26ம் தேதியன்று, ஏதேனும் நிறுவனங்கள் விதிகளை மீறி செயல்பட்டதா என்பது குறித்து தொழிலாளர் உதவி ஆணையர் கோடீஸ்வரி தலைமையில் ஆய்வு நடந்தது.
மொத்தம் 134 நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 9 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், 41 உணவகங்கள், 32 கடைகள் என மொத்தம் 82 நிறுவனங்கள் விதிகளை மீறியும், முன்னனுமதி பெறாமலும் இயங்கி வந்தது தெரிய வந்தது. இந்நிறுவனங்களின் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவனங்களின் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று உதவி ஆணையர் கோடீஸ்வரி தெரிவித்துள்ளார்.
Follow Us