Advertisment

சேலத்தில் 46,487 மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்! ஹேண்ட் சானிடைசர்... முகக்கவசம்... விரிவான ஏற்பாடுகள் தயார்!!

salem district 10th, 11th, 12th  board exam students

தமிழகத்தில் வரும் 15- ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தில் இப்பொதுத் தேர்வை 46,487 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக தேர்வர்கள், ஆசிரியர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கவும், ஹேண்ட் சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

Advertisment

கரோனா தொற்று அபாயம் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கடந்த ஏப்ரல் மாதமே நடத்தி முடித்திருக்க வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் கரோனா பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் வரும் 15- ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இதையடுத்து, பொதுத்தேர்வுகளை பாதுகாப்பாக நடத்துவது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில், வெள்ளியன்று (ஜூன் 5- ஆம் தேதி) ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆட்சியர் கூறியது:

கரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும் 15.6.2020 அன்றுதொடங்கி ஜூன் 25- ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. ஏற்கனவே கடந்த மார்ச் 26- ஆம் தேதியன்று நடைபெற இருந்த பிளஸ்-1 பொதுத்தேர்வு வரும் 16- ஆம் தேதி நடத்தப்படும். கடந்த மார்ச் 24- ஆம் தேதியன்று நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில், கலந்து கொள்ளாத தேர்வர்களுக்கு மட்டும் வரும் 18- ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.

சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் 532 பள்ளிகளில் நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை பள்ளிகள் மூலம் 22,730 மாணவர்கள், 22,332 மாணவிகள் என மொத்தம் 45,062 பேர் எழுதுகின்றனர். இவர்களுடன் தனித்தேர்வர்களாக நேரடியாக 1,425 மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர். அவர்களுடன் சேர்த்து மாவட்டம் முழுவதும் மொத்தம் 46,487 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர். அதேபோல், பிளஸ்-1 பொதுத்தேர்வை 36,686 மாணவர்களும், பிளஸ்-2வில் பொதுத்தேர்வை 1,592 பேரும் எழுதுகின்றனர்.

இத்தேர்வுக்கு 531 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 531 துறை அலுவலர்கள், 5859 அறைக் கண்காணிப்பாளர்கள், 793 நிலையான படையினர், 272 சொல்வதை எழுதுபவர், 31 வழித்தட அலுவலர்கள், 28 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 579 ஆசிரியரல்லா பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பிளஸ்-1, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு அனைத்து அரசு, நிதியுதவி பெறும், சுயநிதி பள்ளிகளும் தேர்வு மையங்களாகச் செயல்படும். அதனால் தேர்வர்கள், அவரவர் படித்த பள்ளியிலேயே தேர்வுகளை எழுதலாம். ஏற்கனவே தேர்வு மையமாகச் செயல்படும் பள்ளிகள் முதன்மைத் தேர்வு மையங்களாகவும், அவற்றுடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் துணைத்தேர்வு மையங்களாகவும் செயல்படும்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 160 முதன்மைத் தேர்வு மையங்கள், 372 துணைத்தேர்வு மையங்கள் என 532 தேர்வு மையங்கள் மற்றும 56 சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பிளஸ்&1, பிளஸ்&2 பொதுத்தேர்வுக்கு 127 முதன்மைத் தேர்வு மையங்கள், 195 துணைத்தேர்வு மையங்கள் என 322 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக அனைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல விடுதிகள், ஆதிதிராவிடர் மாணவிகள் தங்கும் விடுதிகள், உண்டு உறைவிட பள்ளிகள் வரும் 11- ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

கரோனா தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்புடன் சமூக இடைவெளியோடு தேர்வுகள் நடத்திடும் வகையில் ஒவ்வொரு தேர்வு அறையிலும் 10 தேர்வர்கள் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தேர்வு அறையில் மாணவர்கள், தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீளப்பயன்படுத்தக் கூடிய வகையிலான முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படும். தேர்வு மையங்கள் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருப்பின், மாற்று மையங்கள் அமைக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்புத்தேர்வு மையம் அமைக்கப்படும்.

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் அவர்களின் அடையாள அட்டை, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு அடிப்படையில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து வெளியே செல்லவும், உள்ளே வரவும் அனுமதிக்க தெரிவிக்கப்பட்டு உள்ளது.தேர்வர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தேர்வு மையத்திற்கு வரும்போது கைகளை சோப்பு அல்லது ஹேண்ட் சானிடைசர் போட்டு சுத்தம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களை தேர்வு மையத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட தனி அறையில் அமர வைத்து தேர்வெழுத நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு நாளும் தேர்வு தொடங்குவதற்கு முன்பு, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தேர்வு மையங்களில் உள்ள தேர்வறைகள், தேர்வுப்பணி நடக்கும் அறைகள் ஆகியவற்றில் உள்ள மேசை, நாற்காலி, இருக்கைகள், கைப்பிடிகள் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதை உறுதி செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து தேர்வு எழுதும் பொருட்டு, சொந்த ஊருக்கு வரும் மாணவர்கள் அடையாள அட்டை அல்லது தேர்வு அனுமதிச்சீட்டை காண்பிக்கும் பட்சத்தில் அம்மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர், பாதுகாவலர்கள் மின்னணு அனுமதிச்சீட்டு இல்லாமல் தேர்வு மையங்கள் அமைந்துள்ள அவர்களுடைய சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கப்படுவர். அதேபோல், அடையாள அட்டையைக் காண்பிக்கும் பட்சத்தில், மின்னணு அனுமதிச்சீட்டு இல்லாமலேயே வெளியே இருந்து வரும் தேர்வர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

http://onelink.to/nknapp

தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் புதிதாக தேர்வு நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) கணினி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது. பதிவிறக்கம் செய்யாத மாணவர்கள், தங்களது பள்ளித் தலைமை ஆசிரியரை அணுகியும் நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம். இவ்விரு வழிமுறைகளிலும் தேர்வு நுழைவுச்சீட்டை பெற இயலாதவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்.

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும், வெளியூர்களில் இருந்து வந்துவிட்டு தனிமைப்படுத்தலில் உள்ள மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு வந்து நுழைவுச்சீட்டு பெற அழைக்காமல், அவர்களை நேரடியாகத் தேடிச்சென்று நுழைவுச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறினார். ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், மேட்டூர் துணை ஆட்சியர் சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரதாப்சிங், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

students tamilnadu sslc exam 12th 11th District Collector Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe