ADVERTISEMENT

மகன் திட்டியதால் 1.49 லட்சம் ரொக்கத்துடன் ஊர் ஊராக சுற்றிய முதியவர்; காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்!

12:24 AM Jan 29, 2020 | santhoshb@nakk…

சேலம் அருகே, மகன் திட்டியதால், 1.49 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் எங்கு செல்வது என்று தெரியாமல் ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருந்த 70 வயது முதியவரை மீட்ட இளைஞர், காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

ADVERTISEMENT


சேலம் மாவட்டம் அரியானூர் பகுதியில் உள்ள முனியப்பன் காடு தோப்புக்குள் சந்தேகத்திற்கு இடமான வகையில் முதியவர் ஒருவர் நீண்ட நேரமாக அங்குமிங்கும் சுற்றிக்கொண்டிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (27) என்ற இளைஞர், அந்த முதியவரை பிடித்து பெயர், ஊர் விவரங்களை விசாரித்துள்ளார். அதற்கு அவர் தன்னுடைய பெயர் தைலப்பன், 70 வயதாகிறது என்று கூறினார். ஆனால் ஊர் பெயரைக் கேட்டதற்கு மட்டும் தர்மபுரி என்றும், பிறகு ஆட்டையாம்பட்டி என்றும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

ADVERTISEMENT


இதையடுத்து ஆனந்தன், அந்த முதியவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்று ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். ஆய்வாளர் குணசேகரன், எஸ்ஐ வெங்கடாசலம் இன்னும் சில காவலர்கள் பணியில் இருந்துள்ளனர். அவர்கள் முதியவரிடம் விசாரித்தபோது, அவர் பெயர் தைலப்பன் என்பது ஊர்ஜிதமானது. அவருடைய சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அனுமந்தீர்த்தம் என்பதும் தெரிய வந்தது.


அவருக்கு ஒரு மகனும், ராஜேஸ்வரி (45) என்ற ஒரு மகளும் உள்ளனர். தைலப்பன் தனக்குச் சொந்தமான நிலத்தை அண்மையில் விற்றுள்ளார். அதில் கிடைத்த பணத்தை மகன், மகளுக்கு பிரித்துக் கொடுத்தது போக, ஒரு பங்கு பணத்தை வங்கியில் செலுத்தாமல், தானே ரொக்கமாக வைத்திருந்திருக்கிறார். சேலம் வந்ததற்கும் ஒரு காரணம் இருந்திருக்கிறது. மகளை, சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள பாப்பாரப்பட்டியில்தான் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.


நிலம் விற்றதன் மூலம் கிடைத்த 1.49 லட்சம் ரூபாயை லுங்கியில் கற்றை கற்றையாக சுருட்டி வைத்துக்கொண்டு, ஊர் ஊராகச் சுற்றி உள்ளார். பாப்பாரப்பட்டியில் உள்ள மகளையும் பார்க்க வந்துள்ளார். இதையறிந்த அவருடைய மகன், தந்தையை திட்டியதால், கோபித்துக்கொண்டு மகள் வீட்டுக்குச் செல்லாமல், அதேநேரம் ஊருக்கும் செல்ல மனமில்லாமல் அரியானூர் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார். அப்போதுதான் ஆனந்தன் என்ற இளைஞர் அவரை மீட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்திருப்பது தெரிய வந்தது.


அதைத் தொடர்ந்து மகள் ராஜேஸ்வரிக்கு தகவல் அளித்த காவல்துறையினர், அவரை ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்திற்கு வரவழைத்தனர். பின்னர் நடந்த விவரங்களைச் சொல்லி, ராஜேஸ்வரியிடம் தைலப்பனை ஒப்படைத்தனர். அவருக்கு அறிவுரை கூறி மகளுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். முதியவரை மீட்டு பொறுப்பாக காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர் ஆனந்தனை காவல்துறையினர் பாராட்டினர்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT