Salem daily wages person case police arrested two

சேலத்தில், மூட்டை தூக்கும் தொழிலாளி கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வழிப்பறி திருடர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisment

சேலம் கிச்சிப்பாளையம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (38). மூட்டை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இவருடைய மனைவி கண்ணனை பிரிந்து, வேறு ஒருவருடன் வாழ்த்து வருகிறார். இதையடுத்து குழந்தைகளை கண்ணனே மாமியார் உதவியுடன் வளர்த்து வந்தார். இவர், டிச. 21ம் தேதியன்று வீட்டின் அருகில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

Advertisment

இச்சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், சம்பவ இடத்தில் இருந்து இரண்டு பேர் செல்வது தெரிய வந்தது.

சொல்லி வைத்தாற்போல் கண்ணன் கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து அந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் மேல் ஏற்கனவே வழிப்பறி, திருட்டு, அடிதடி வழக்குகளும் உள்ளன. இதனால் குறிப்பிட்ட அந்த இருவர் மீதும் காவல்துறைக்கு சந்தேகம் வலுத்தது. சந்தேகத்திற்குரிய அந்த இருவரின் செல்போன் சிக்னல்களை வைத்து போலீஸார், அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் காவல்துறை தனிப்படையினரிடம் சிக்கினர்.

Advertisment

விசாரணையில் அவர்கள் கிச்சிப்பாளையம் ராஜா பிள்ளை காட்டைச் சேர்ந்த தமிழரசன் (20), கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்த கார்த்தி என்கிற கண்ணன் (23) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் கண்ணனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

தமிழரசனும், கார்த்தியும் நெருக்கமான கூட்டாளிகள். இரவில் குடித்துவிட்டு தூக்கம் வரும்வரை ஊர் சுற்றுவது வழக்கமாக வைத்துள்ளனர். சம்பவத்தன்று இரவு இவர்கள் பாரதியார் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கண்ணன், அவர்களிடம் பீடி பற்ற வைப்பதற்கு தீப்பெட்டி கேட்டுள்ளார்.

இதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த இருவரும் கண்ணனை ஓட்டு வில்லை மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். அவரிடம் இருந்த பணத்தையும் திருடிச் சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.