சேலத்தில், தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் செப். 14ம் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. சேலம் சட்டப்பணிகள் ஆணைக்குழு இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
மக்கள் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி மற்றும் கடன் போன்ற வங்கிகள் தொடர்பான வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து தொடர்பான வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகள், குடும்பநல வழக்குகள் ஆகிய வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/salem court1.jpg)
மக்கள் நீதிமன்றத்தில் இரு தரப்பினரின் ஒப்புதலுடன் வழக்குகள் முடிக்கப்படுவதால், இதில் யார் தோற்றவர், யார் வென்றவர் என்ற நிலை ஏற்படுவதில்லை. இதனால் பாகப்பிரிவினை மற்றும் குடும்பநல வழக்குகளில் சமரச நீதிமன்றத்தின் முன் முடிக்கப்படும் போது இருதரப்பினருக்கிடையிலும் உறவுமுறை தொடரும். மக்கள் நீதிமன்றத்தின் மூலம் முடிக்கப்படும் வழக்கில் ஏற்படும் உத்தரவானது இறுதியானது மற்றும் மேல்முறையீடு கிடையாது.
மேலும், நீதிமன்ற கட்டணம் முழுவதுமாக திருப்பிப் பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. மக்கள் நீதிமன்றத்தின் மூலம் வழக்குகள் உடனுக்குடன் தீர்க்கப்படுவதால் வழக்காடிகள் நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதற்கான கால விரயம் தவிர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார்.
Follow Us