சேலத்தில்நிலத்தகராறில் விவசாயியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் கன்னங்குறிச்சி ஆறுமுகம் தெருவைச் சேர்ந்தவர் விவசாயியான முருகேசன் (42). முருகேசனுக்கும்அவருடைய உறவினர் சக்திகுமார்என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு, அக். 4 ஆம் தேதி, கன்னங்குறிச்சியில் உள்ள எல்.பி. செட்டி சாலை மதுபானக்கடை அருகே முருகேசன் வந்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சக்திகுமார் (35), அவருடைய கூட்டாளிகள் முனியப்பன் (43), பன்னீர் என்கிற பன்னீர்செல்வம் (35), கோபால் (28) ஆகிய நான்கு பேரும் அவரை வழிமறித்து கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணைசேலம் இரண்டாவது கூடுதல் அமர்வுநீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையில் இருந்தபோதேகுற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பன்னீர்செல்வம் மரணம் அடைந்து விட்டார்.
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதி ரவி செவ்வாய்க்கிழமை (டிச. 13) தீர்ப்பு அளித்தார். சக்திகுமார், முனியப்பன்,கோபால் ஆகிய மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.இவ்வழக்கில் அரசுத்தரப்பில் வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி வாதாடினார்.