
சேலத்தில், மனைவியை திராவகம் ஊற்றி கொலை செய்ததாக பிடிபட்ட மாநகராட்சி ஊழியர் காவல்துறையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம் குகை புலிக்குத்தி தெருவைச் சேர்ந்தவர் ஏசுதாஸ் (52). சேலம் மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரேவதி (47). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ரேவதியின் நடத்தையில் கணவருக்கு அண்மைக் காலமாக சந்தேகம் இருந்து வந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் மனைவி நெருங்கிப் பழகி வருவதாக சந்தேகம் கொண்ட ஏசுதாஸ், அவரை அடித்து உதைத்துள்ளார்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. கணவரிடம் கோபித்துக் கொண்ட ரேவதி, நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு செல்போன் மூலம் அவரை பலமுறை தொடர்பு கொண்டு அழைத்தும் ரேவதி வரவில்லை. இந்நிலையில், ஆக. 29ம் தேதி ரேவதியை அழைத்து வருவதற்காக ஏசுதாஸ் வையப்பமலைக்கு நேரில் சென்றிருந்தார். அவரை ஒரு வழியாக சமாதானம் செய்து, சேலத்திற்கு அழைத்து வந்தார்.
அன்று இரவே மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் மனைவியைத் தாக்கியுள்ளார். இது தொடர்பாக ரேவதி, திங்கள்கிழமை (ஆக. 30) சேலம் நகர அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரைப் பதிவு செய்த எஸ்.ஐ. மேனகா, கணவன் மனைவி இருவரையும் அன்று மாலை நேரில் அழைத்து சமாதானம் செய்துள்ளார். அப்போது ரேவதியுடன் அவருடைய தாயார் ஆராயியும் வந்திருந்தார். இனிமேல் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றும், நீதிமன்றம் மூலம் சட்டப்படி விவாகரத்து செய்து விடுகிறேன் என்றும் ரேவதி எழுதிக் கொடுத்துள்ளார்.
அதன்பிறகு தாயாருடன் வையப்பமலைக்குச் செல்வதற்காக சேலம் பழைய பேருந்து நிலையத்திற்குச் சென்றார். அவரை பின்தொடர்ந்து சென்ற ஏசுதாஸ், திடீரென்று பாட்டிலில் மறைத்து வைத்திருந்த திராவகத்தை (ஆசிட்) எடுத்து ரேவதியின் மீது வீசினார். இதில் அவருடைய முகம், மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. திராவகம் பட்டவுடன் அவருடைய உடல் வெந்தது. அணிந்திருந்த உடையும் உருகியது.
ஆசிட் காயத்தால் ரேவதி அலறித்துடித்தார். வலியால் பேருந்து நிலையத்தில் அங்குமிங்கும் ஓடினார். தரையில் உருண்டு புரண்டார். திராவகத்தின் சில துளிகள் அருகில் இருந்த ஆராயி மீதும் சிதறியதில் அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஏசுதாஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ரேவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ரேவதி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

இதையடுத்து ரேவதியை கொலை செய்ததாக ஏசுதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவரை பிடிக்க தனிப்படை அமைத்து, காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். இந்நிலையில், சேலத்தில் சுற்றித்திரிந்த ஏசுதாஸை தனிப்படை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (ஆக. 31) மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
காவல்துறையில் விசாரணையில் பேசிய ஏசுதாஸ், “என் மனைவிக்கு வேறு ஒருவருடன் தவறான தொடர்பு இருந்து வந்தது. அந்த தொடர்பைக் கைவிடுமாறு கண்டித்தும் அவர் விடவில்லை. மாறாக அவர் என்னை 6 மாத காலம் பிரிந்து சென்று தாயுடன் வசித்து வந்தார். இதெல்லாம் எனக்கு அவமானமாக இருந்தது. ஒருவழியாக மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தேன். அப்போதும் அவர் இனிமேல் என்னுடன் வாழ மாட்டேன் என்றதோடு, காவல்நிலையத்திலும் புகார் அளித்தார். இது எனக்கு மேலும் மேலும் ஆத்திரத்தை அதிகரித்தது.
நான் பட்ட மனவேதனையை அவளும் பட வேண்டும். அழகாக இருப்பதால்தான் அவள் பலருடனும் நெருங்கிப் பழகுகிறாள். அதனால் அவளுடைய முகத்தைச் சிதைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மனைவி மீது திராவகத்தை ஊற்றினேன். இதற்காக சலவைத் தொழிலாளியான என் நண்பர் ஒருவரிடம் ஆசிட் கேட்டிருந்தேன். அவர் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து திராவக பாட்டிலைக் கொடுத்துவிட்டுப் போனார்” இவ்வாறு ஏசுதாஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஏசுதாஸை, நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர். அவருக்கு திராவகம் வழங்கியவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.