
சேலத்தில் வீட்டு உபயோகத்திற்காக பெறப்பட்ட குடிநீர் இணைப்பை, வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வந்த 30 இணைப்புகளை மாநகராட்சி அலுவலர்கள் அதிரடியாக துண்டித்தனர்.
சேலம் மாநகராட்சி பகுதிக்கு மேட்டூர் அணையில் இருந்து தனிக்குடிநீர் திட்டத்தின் மூலம் தேவையான அளவிற்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அனைத்துப் பகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தும் வகையில், பல்வேறு வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த அனுமதி பெறாத, குடிநீர் இணைப்புகளை கண்டறிய வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.
அதன்பேரில், முறைகேடான குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து, அதனை துண்டிக்கும் வகையில் அலுவலர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. குடிநீர் இணைப்புக்கு உரிய காப்புத்தொகை செலுத்தாமலும், வீட்டு உபயோகத்திற்காக குடிநீர் இணைப்பைப் பெற்றுக்கொண்டு வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது உள்ளிட்ட முறைகேடான இணைப்புகளை துண்டிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மாநகராட்சி அலுவலர்கள் நடத்திய ஆய்வில், வீட்டு உபயோகத்திற்கென பெறப்பட்ட குடிநீர் இணைப்பை உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட வணிகப் பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வந்த 30 குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு, உடனடியாக துண்டிக்கப்பட்டது.