salem children incident police investigation

Advertisment

சேலம் அருகே, பாழடைந்த கழிப்பறையில் மர்மமான முறையில் சிறுவன் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே காரிப்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் (13). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வந்தான்.

Advertisment

கரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாததால், சிறுவன் வீட்டில் இருந்து வந்தான். டிச. 1- ஆம் தேதி, நண்பர்களுடன் விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றவன், அதன்பின் வீடு திரும்பவில்லை.

பெற்றோர், மகனை பல இடங்களிலும் தேடிப்பார்த்தனர். சிறுவன் சென்ற இடம் தெரியவில்லை. டிச.2- ஆம் தேதி மாலை, காரிப்பட்டி மகாலட்சுமி நகர் பகுதியில் குப்பை கிடங்கு அருகே, பாழடைந்த கழிப்பறையில் நிர்வாண நிலையில் சந்தோஷ் தூக்கிட்டு சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது.

இதுகுறித்த தகவல் அறிந்து அங்கு வந்த பெற்றோர், சடலமாகக் கிடந்த மகனைப் பார்த்து கதறி அழுதனர். இதுபற்றி காரிப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் சிறுவனின் சடலம் கிடந்தது. கழிப்பறை சுவரில் பல இடங்களில் பெண்களின் நிர்வாணப் படங்கள் கரித்துண்டால் வரையப்பட்டு இருந்தன.

சிறுவனின் உடலிலும் பல இடங்களில் பற்களால் கடிக்கப்பட்ட காயங்கள் இருந்தன. அவனை மர்ம நபர்கள் யாராவது கடத்திச்சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அல்லது யாரேனும் தவறான ஜோடிகள் நெருக்கமாக இருந்ததை நேரில் பார்த்ததால், அவனை சித்ரவதை செய்து கொன்றுவிட்டு, துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதுபோல் சித்தரித்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து காவல் ஆய்வாளர் லட்சுமணன் மற்றும் காவலர்கள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் காரிப்பட்டி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.