salem to chennai 8 way roads government supreme court farmers

Advertisment

சேலம்- சென்னை இடையேயான எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், அவசர வழக்காக விசாரிக்கக்கோரி திடீரென்று மனுத்தாக்கல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் தரப்பு, அவசர வழக்காக விசாரிக்கக் கூடாது என்றும், மெய்நிகர் நீதிமன்றத்தில் விசாரிக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று கடிதம் எழுதியிருக்கிறது.

சேலம்- சென்னை இடையே புதிதாக, 10 ஆயிரம் கோடி ரூபாயில், பசுமைவழி விரைவுச்சாலை என்ற பெயரில் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வந்தன. சேலத்தில் தொடங்கி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை வழியாக காஞ்சிபுரம் வரை 277.3 கி.மீ. தூரத்திற்கு இந்த சாலைத்திட்டம் நீள்கிறது. இதற்காக, 1900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை மாநில அரசு முடுக்கி விட்டிருந்தது.

இத்திட்டத்தை செயல்படுத்தினால், சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் கணிசமான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்பதோடு, நேரடியாக பத்தாயிரம் விவசாயக் குடும்பத்தினரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்று கூறி, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், தமிழக அரசு காவல்துறையினர் மூலம் மிரட்டியே நிலத்தை கட்டாயப்படுத்திப் பிடுங்கிக் கொண்டது.

Advertisment

இத்திட்டத்திற்குத் தடை கேட்டு, விவசாயிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட 50 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 8.4.2019ம் தேதி, ''விவசாயிகளிடம் கருத்து கேட்காமல், காவல்துறையினர் உதவியுடன் நிலத்தைக் கையகப்படுத்திய நடவடிக்கையே தவறு. 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பான அரசாணையை உடனடியாக ரத்து செய்வதுடன், கையகப்படுத்திய நிலங்களை உரியவர்களிடம் முன்பிருந்த நிலையின்படி ஒப்படைக்க வேண்டும்,'' என்று தீர்ப்பு அளித்தது.

உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசும் அதில் தன்னை இணைத்துக் கொண்டது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை ஆரம்பத்தில், நீதிபதி ரமணா உள்ளிட்ட மூன்று பேர் அமர்வு விசாரித்து வந்த நிலையில் திடீரென்று அவர் மாற்றப்பட்டார். பின்னர், நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு பொறுப்பேற்றார். இந்த நிலையில்தான், கொரோனா ஊரடங்கு உத்தரவால் கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக இந்த வழக்கில் எந்த வித முன்னேற்றமுமின்றி முடங்கிக் கிடந்தது.

இந்நிலையில், எட்டுவழிச்சாலைத் திட்ட இயக்குநர் திடீரென்று, இந்த வழக்கு விசாரணையை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரி, ஜூன் 4, 2020ல் ஒரு சிறப்பு விடுப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். எட்டுவழிச்சாலைத் திட்டம் மற்றும் கொரோனா ஊரடங்கால் ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்து நொந்து போயிருக்கும் விவசாயிகள், இந்த புதிய மனுத்தாக்கலால் கடும் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.மனுத்தாக்கல் விவரத்தை அறிந்த சில மணி நேரங்களில் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் விவசாயிகள் அவரவர் வீடுகள் முன்பு குடும்பத்துடன் கையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டனப் போராட்டம் நடத்தினர்.

இது ஒருபுறம் இருக்க, எட்டுவழிச்சாலைக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான தர்மபுரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் அவர் தரப்பு வழக்கறிஞர் பிரபு, இந்த வழக்கின் அடர்த்தி மற்றும் இப்போதுள்ள நோய்த்தொற்று அபாயம் கருதி, விரைவான விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், விர்ச்சுவல் நடைமுறைகளைக் கைவிட்டு நேரடி விசாரணைக்கு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், ஜூன் 5- ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதி இருக்கிறார்.

இதுபற்றி வழக்கறிஞர் பிரபுவிடம் கேட்டபோது, ''எதையெல்லாம் அவசர வழக்காக விசாரிக்கலாம் என்று சில வகைப்பாடுகள் இருக்கின்றன. பிணையில் விடுவது, கஸ்டடி எடுப்பது, அரசு நிர்வாகம் போன்றவை தொடர்பான வழக்குகள்தான் அவசரமாக விசாரிக்கப்படும். எந்த வகையில் ஒரு வழக்கு மிக அவசரம் என்பது குறித்து நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அண்மையில், அவசர வழக்கு என்று நிரூபிக்கத் தேவையில்லை. அதைப்பற்றி விவரித்தாலே போதும், வழக்கை நடத்தலாம் என்றது உச்சநீதிமன்றம். ஜூன் 1- ஆம் தேதி, குறிப்பிட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து இருதரப்பு கட்சிக்காரர்களும் ஒத்திசைந்து வந்தாலே அந்த வழக்கை விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது.

j

இந்நிலையில்தான், எட்டுவழிச்சாலைத் திட்டம் என்பது பெரிய பொருள்செலவிலான திட்டம் என்று கூறி, இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைகள்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து, வரும் 6.7.2020ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருவதாக உச்சநீதிமன்ற இணையதளத்தில் சொல்லப்பட்டு உள்ளது.

இதற்கு ஆட்சேபணை தெரிவித்து கடிதம் சமர்ப்பித்து இருக்கிறோம். இந்த வழக்கு தொடர்பாக, இரு தரப்பிலும் பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இப்படியான சூழலில் இந்த வழக்கை விர்ச்சுவல் (மெய்நிகர்) நீதிமன்றத்தில் விசாரிப்பது உகந்தது அல்ல. நேரடியாக இருதரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகி விசாரித்தால்தான் நல்லது. மெய்நிகர் நீதிமன்ற நடைமுறை முன்னெப்போதும் இருந்ததில்லை. இதில், 'எக்ஸ்ட்ரீம்லி அர்ஜன்சி' என்று எதுவும் இல்லை,'' என்றார்.