Advertisment

"நெஞ்சில் பால் வார்த்த ஸ்டாலின்!" - '8' வழிச்சாலை விவசாயிகள் நெகிழ்ச்சி!!

salem chennai 8 way road

Advertisment

சேலம் டூ சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை என்றைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்தாரோ, அப்போது முதலே அவருக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது என்கிறார்கள், இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள். நாடாளுமன்றத் தேர்தலைப் போல, சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுக்கு மரண அடி கொடுப்போம் என சூளுரைத்திருக்கிறார்கள் சேலம் விவசாயிகள்.

சேலம் - சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்தை 10 ஆயிரம் கோடி ரூபாயில் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வரை 277.3 கி.மீ. தூரத்துக்கு பசுமைவழி விரைவுச்சாலை அமைக்க, 2343 ஹெக்டேர் நிலத்தை சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து தடாலடியாகப் பறித்துக் கொண்டது எடப்பாடி பழனிசாமியின் அரசு.

நிலம் கொடுக்க மறுத்த விவசாயிகள், கோரிக்கை மனு அளித்தவர்கள், திட்டத்துக்கு எதிராகப் பேசியவர்கள் என அனைவர் மீதும் கன்னாபின்னாவென்று வழக்குப் போட்டு அச்சுறுத்தினர். இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ''விவசாயிகளிடம் இருந்து நிலத்தைக் கையகப்படுத்திய முறை தவறு. நிலத்தை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்காக போடப்பட்ட அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்,'' என்று 2019 ஏப்ரல் 8ம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

Advertisment

இதை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. உச்சநீதிமன்றமோ, ''8 வழிச்சாலைத் திட்டத்திற்குத் தடை இல்லை. அதேநேரம், புதிய அரசாணை வெளியிட வேண்டும். மேலும், சுற்றுச்சூழல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்'' என்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு, விவசாயிகள் தலையில் பேரிடியாக இறங்கியது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின்போது, விரைவில் சேலம் டூ சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இத்திட்டம் அமைய உள்ள சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில், பத்தாயிரம் விவசாயிகள், தேர்தல் நேரத்தில் இத்திட்டத்தை நிறுத்தி வைப்பது தொடர்பாக ஏதேனும் அறிவிப்பு வருமா என எதிர்பார்த்து இருந்தனர். அதிமுக, திமுக தேர்தல் அறிக்கைகளில் இது பற்றி எதுவும் குறிப்பிடாதது விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்களைச் செய்து, மார்ச் 14ம் தேதி வெளியிட்டது. அதில், 'திமுக ஆட்சி அமைந்தால், 8 வழிச்சாலைத் திட்டம் ரத்து செய்யப்படும்' என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைக்கேட்டு, இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் உற்சாகம் அடைந்தனர். சேலம் மாவட்டத்தில் உத்தமசோழபுரம், பாரப்பட்டி, வீரபாண்டி, பூலாவரி, நிலவாரப்பட்டி, கூமாங்காடு உள்ளிட்ட பத்து பஞ்சாயத்துகளைச் சேர்ந்த விவசாயிகள் திரண்டு வந்து, ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

இது தொடர்பாக 8 வழிச்சாலைத் திட்ட எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் மோகனசுந்தரம், சிவகாமி ஆகியோர் நம்மிடம் பேசினர்.

salem chennai 8 way road

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, எட்டுவழிச்சாலை திட்டம் ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்த அழிவுத்திட்டம் வேண்டாம் என்று கடந்த 3 வருஷமாகக் கதறி, அழுது புரண்டு கோரிக்கை வைத்தோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களை ஒருமுறை கூட நேரில் சந்தித்துப் பேசவில்லை.

அவரை சந்திக்கப்போன எங்களை மறித்து காவல்துறையினர் வழக்கு போட்டனர். சர்வாதிகார ஆட்சியில்தான் இப்படி எல்லாம் நடக்கும். இதுவரை கடும் மன உளைச்சலில் இருந்தோம். திமுக அளித்த வாக்குறுதிக்குப் பிறகுதான், நிம்மதியாக இரவு தூங்கச் போகிறோம். விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்த்து விட்டார் ஸ்டாலின்.இத்திட்டத்தை ரத்து செய்வதன் மூலம் விவசாயிகளை மட்டுமின்றி உணவு உற்பத்தி, கனிம வளம் கொள்ளை, சுற்றுச்சூழல் ஆகியவற்றையும் ஸ்டாலின் காப்பாற்றி விடுவார்.

salem chennai 8 way road

'விவசாயி மகன்' என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொன்னாலும், விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படும் எடப்பாடி பழனிசாமி விவசாயியாக முடியாது. விவசாயிகளின் துயரங்களை உணர்ந்த ஸ்டாலின்தான் உண்மையான விவசாயி.கடந்த பாராளுமன்றத் தேர்தலை போல, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் விவசாயிகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வோம். அதிமுகவை தோற்கடிப்போம்,என்றனர்.

இது ஒருபுறம் இருக்க, மார்ச் 13ம் தேதி வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையிலேயே 8 வழிச்சாலை பற்றி குறிப்பிடாததும் ஒரு தரப்பு விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க மற்றொரு ஒருங்கிணைப்பாளரான குள்ளம்பட்டி பன்னீர்செல்வம் கூறுகையில், ''திமுக தேர்தல் அறிக்கையை 7 பேர் கொண்ட குழு, கடந்த சில மாதங்களாக ஆலோசித்து எழுதி இருக்கிறது. அப்படி இருந்தும், 8 வழிச்சாலைத் திட்டத்தை முதல்முறை வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே சொல்லாதது எங்களில் பலருக்கு கடும் ஏமாற்றம் அளித்தது.

paner

இங்குள்ள திமுக பிரமுகர்களிடம் விவசாயிகள் அழுத்தம் கொடுத்த பிறகுதான், மார்ச் 14ம் தேதி சில திருத்தங்களை செய்து, 8 வழிச்சாலை திட்டம் ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை திமுக முழு மனதோடு எதிர்க்கிறதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது'' என்றார். உலகுக்கே படியளக்கும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் எந்த ஓர் அரசும் நீடித்ததாக வரலாறு இல்லை. எடப்பாடி பழனிசாமியும் இதை உணராதவர் அல்லர்.

chennai salem expressway
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe