Advertisment

எட்டுவழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்தை திரும்ப ஒப்படைக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்

எட்டுவழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்கக்கோரி சேலத்தில் விவசாயிகள், வியாழக்கிழமையன்று (ஜூன் 27, 2019) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

சேலம் & சென்னை இடையேயான எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்திற்காக சேலத்தில் மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி, குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, ராலிங்கபுரம், நிலவாரப்பட்டி, பூலாவரி, கூமாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் நடந்தன.

Advertisment

s

இந்த திட்டத்திற்காக, கடந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் நிலத்தை அளந்து முட்டுக்கல் நடப்பட்டன. மத்திய, மாநில அரசுகளின் இந்த நடவடிக்கைக்கு, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே, பாமக மற்றும் விவசாயிகள் சிலர், எட்டுவழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் திட்டத்தை முன்னெடுத்தது தவறு என்றும், இத்திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்யுமாறும், கையப்படுத்தப்பட்ட நிலத்தை உரிய விவசாயிகளிடம் ஒப்படைக்குமாறும் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு அளித்தது. ஆனால், விவசாய நிலங்களில் பதிக்கப்பட்ட முட்டுக்கற்கள் இன்னும் அகற்றப்படவில்லை. நிலமும் விவசாயிகளிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படவில்லை.

இதையடுத்து, எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்கக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் விவசாயிகள் வியாழக்கிழமை (ஜூன் 27) சேலம் பழைய நாட்டாண்மைக் கழக கட்டடம் அருகில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.

ஊர்வலமாகச் செல்ல அனுமதி இல்லை எனக்கூறி, காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் உள்ள மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ''எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்காக எங்களது விளை நிலங்களில் அளவைப் பணிகளை முடித்து, முட்டுக்கற்கள் நட்டுள்ளனர். இவ்வாறு கையகப்படுத்திய நிலங்களை 8 வார காலத்திற்குள் உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் தீர்ப்பு கூறி 10 வாரங்களுக்கு மேல் ஆகியும் எங்கள் நிலம், எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனால், அவசரத்தேவைக்காக நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கவோ, வேறு நபர்களுக்கு விற்பனை செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமி-ழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்,'' என்றனர்.

இதையடுத்து அவர்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியர் அலுவலக ஊழியர்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றனர். விவசாயிகள் திடீரென்று ஊர்வலமாகச் செல்ல முயன்றதால், பலத்த காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டு இருந்தது.

Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe