
சேலம் அருகே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக கூலிப்படை கும்பல் தலைவனை 15 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொல செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தை அடுத்துள்ள நாழிக்கல்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் பச்சியப்பன். இவருடைய மகன் திருநாவுக்கரசு (26). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. இவர், மீது மல்லூர் காவல்நிலையத்தில் ஏற்கனவே கொலை, திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. திருமணத்திற்குப் பிறகு, சொந்த ஊரை விட்டு சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணத்தில் மனைவியுடன் தனியாக வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் (டிச. 17) இரவு திருநாவுக்கரசு, நாழிக்கல்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு நண்பர் சரவணன் (19) என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். இரவு 9.30 மணியளவில், அதே பகுதியைச் சேர்ந்த 15 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக தாக்கியது.
இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் அங்கேயே நிலைகுலைந்து சரிந்து விழுந்தனர். ஊர் மக்கள் திரண்டு வருவதை அறிந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்ட அப்பகுதியினர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு நள்ளிரவில் உயிரிழந்தார். சரவணனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக மல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் கலையரசி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதியன்று, நாழிக்கல்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அப்போது விநாயகர் சிலை வைப்பதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த தகராறில் திருநாவுக்கரசு, சரவணன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் சேர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த திலீப்குமார் என்பவரை கத்தியால் குத்தியும், இரும்பு கம்பியால் தாக்கியும் படுகொலை செய்தனர். இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சரவணன் ஆகிய இருவரும் அப்போது கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில்தான், திருநாவுக்கரசுவின் மாமனார் நேற்று முன்தினம் சபரி மலைக்குச் செல்ல இருந்ததால் அவரை வழியனுப்பி வைப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். திலீப்குமாரின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த அவருடைய கூட்டாளிகள், திருநாவுக்கரசுவும், அவருடைய நண்பர் சரவணனும் தனியாக பேசிக்கொண்டு இருந்ததை நோட்டமிட்டு உள்ளனர்.
இதையடுத்து 15 பேர் கொண்ட கும்பல் அவர்களை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தின் மீது காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு கடும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இதன் தொடர்ச்சியாக நாழிக்கல்பட்டியில் அடுத்தடுத்து சில கொலைகள் விழலாம் என எச்சரிக்கின்றனர் அப்பகுதியினர்.
மேலும், திலிப்குமாரின் கொலைக்கு வஞ்சம் தீர்க்கும் வகையில் பழிக்குப்பழியாக கொலை நடக்கும் என்று கடந்த 2019ம் ஆண்டு, செப். 8ம் தேதியன்று நக்கீரன் இணையதள செய்தியிலும் நாம் எச்சரிக்கை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.