நாமக்கல் அருகே, சேலம் பெண் கொலை செய்யப்பட்டு, திருப்பூர் அமராவதி ஆற்றங்கரையில் வீசப்பட்ட வழக்கில் கிரேன் வாகன ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

salem case accused arrested

நாமக்கல் செம்பாளிகரடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இவருடைய மனைவி திருமங்கை (26). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. இவர்கள், சேலம் புதிய பேருந்து நிலையம் ஏஆர்ஆர்எஸ் திரையரங்கம் அருகே இரவு நேர உணவகம் வைத்திருந்தனர்.

Advertisment

நவ. 15ம் தேதி, திருப்பூர் மாவட்டம் மூலனூர் அமராவதி ஆற்றின் கரையோரம் திருமங்கை சடலமாகக் கிடந்தார். அவருடைய இரு கைகளும் கட்டப்பட்டு இருந்தன. முகத்தில் காயங்கள் இருந்தன. இது குறித்து மூலனூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையே திருமங்கை கொலை செய்யப்பட்ட விவரம், அவருடைய புகைப்படம் ஆகியவை சமூக ஊடகங்களில் வெளியானது.

Advertisment

இது, திருமங்கையின் கணவர் ரமேஷின் செல்போனுக்கும் கிடைத்தது. இதையடுத்து ரமேஷ், மூலனூர் காவல்துறையினரிடம் மனைவியின் சடலத்தை அடையாளம் காட்டினார். சடலத்தை உடற்கூறு ஆய்வு செய்ததில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

திருமங்கையின் செல்போனில் பதிவான எண்கள், அவரிடம் அடிக்கடி பேசியவர்களின் பட்டியல் ஆகியவற்றை எடுத்து விசாரணை நடத்தினர். நவ. 14ம் தேதி மாலை, திருமங்கையின் செல்போன் எண், நாமக்கல் - சேலம் சாலையில் நீண்ட நேரமாக பயன்பாட்டில் இருந்தது தெரிய வந்தது.

அதனால் இந்த வழக்கை நாமக்கல் மாவட்ட காவல்துறையினரும் விசாரித்து வந்தனர். நவ. 14ம் தேதியன்று இரவு அவர் உணவகக் கடை திறக்கவில்லை என்பதையும் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். திருமங்கையின் கடை அருகில் உள்ளவர்களிடமும் விசாரணை நடந்தது.

இதில், சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த கிரேன் ஓட்டுநர் தனபால் (25) என்பவருடன், திருமங்கைக்கு தொடர்பு இருந்து வந்ததும் தெரிய வந்தது. அதையடுத்து தனபாலை பிடித்து விசாரித்தபோது, முதலில் திருமங்கை யாரென்றே தெரியாது என்று அடம் பிடித்தவர், பின்னர் அவரை கழுத்தை இறுக்கிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

காவல்துறையில் தனபால் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து, கடந்த இரண்டு ஆண்டாக தங்கி இருக்கிறேன். கிரேன் வாகனம் ஓட்டி வரும்போது எனக்கும் திருமங்கைக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவரும் அடிக்கடி என்னை பார்க்க என் அறைக்கு வந்து செல்வார். அப்போது நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்திருக்கிறோம்.

ஆனால் திருமங்கைக்கு வேறு சிலருடனும் நெருக்கமான தொடர்பு இருப்பதுபோல் எனக்கு கொஞ்ச காலமாக சந்தேகம் இருந்து வந்தது. கடந்த 17ம் தேதி மாலை 4 மணிக்கு அவர் என்னை தேடி வந்தபோது, வேறு ஒரு நபருடன் பேசி வருவது குறித்து கேட்டேன். இதற்கு திருமங்கை மறுப்பு தெரிவித்து என்னிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்து அவருடைய கழுத்தை இறுக்கிக் கொலை செய்தேன். பின்னர் அறையைப் பூட்டிவிட்டு, வெளியே சென்று விட்டேன். அன்று நள்ளிரவு ஒரு மணியளவில், என் நண்பர் ஒருவரின் உதவியுடன் திருமங்கையின் சடலத்தை ஏற்றிக்கொண்டு மூலனூர் பகுதிக்குக் கொண்டு சென்று, அமராவதி ஆற்றங்கரையோரம் வீசிவிட்டு சென்றுவிட்டேன்.

மூலனூர் பகுதியில் திருமங்கையின் சித்தி வீடு இருப்பதால், அவர்கள் மீது காவல்துறையினரின் சந்தேகம் திரும்பும் எனக்கருதி சடலத்தை அந்த இடத்தில் போட்டுவிட்டோம். இவ்வாறு தனபால் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் கூறினர்.

இதையடுத்து கொலையாளி தனபாலை காவல்துறையினர் கைது செய்தனர். இரண்டே நாளில் குற்றவாளியை கைது செய்த காவல்துறையினரை நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு பாராட்டினார்.