Advertisment

சேலம் கால் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கு; இருவருக்கு ஆயுள் தண்டனை

Salem call taxi driver case life sentence for two

Advertisment

சேலத்தில் கால் டாக்ஸி ஓட்டுநர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம் மணியனூர் பாண்டு நகரைச் சேர்ந்தவர் அபிஷேக்மாறன் (29). இவர், சேலத்தில் உள்ள ஒரு தனியார் கால் டாக்ஸி நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். தனக்குச் சொந்தமான மூன்று கார்களையும், தான் வேலை செய்து வந்த டிராவல்ஸ் நிறுவனத்திடமே வாடகை ஒப்பந்தத்திற்கும் விட்டிருந்தார்.

அபிஷேக் மாறனுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருடன் திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. கருத்து வேறுபாட்டால் மனைவி குழந்தையுடன் தனியாக பிரிந்து சென்று விட்டார். அதையடுத்து அபிஷேக்மாறன் வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவரும் பிரிந்து சென்று விட்டார்.

Advertisment

இந்நிலையில் அபிஷேக்மாறன், தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியில் வசிக்கும் தன் நண்பன் பிரபாகரன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அவருடைய மனைவியுடனும் நெருங்கிப் பழகி வந்துள்ளார். ஒருகட்டத்தில், பிரபாகரனின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். மேலும், செல்போனிலும் அடிக்கடி ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதையறிந்த பிரபாகரன், அபிஷேக்மாறனை எச்சரித்தார். ஆனாலும், அவர் செல்போன் மூலம் மீண்டும் ஆபாசமாக பேசி வந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன், அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதைடுத்து, கடந்த 2020ம் ஆண்டு, மே மாதம் 5ம் தேதி, அபிஷேக் மாறன் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அன்று அதிகாலையில் அங்கு வந்த பிரபாகரனும், அவருடைய கூட்டாளியான எருமாபாளையத்தைச் சேர்ந்த அருள்குமார் (23) என்பவரும், அபிஷேக்மாறனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், அபிஷேக்மாறனை கொலை செய்ததாக பிரபாகரன், அருள்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் துரைராஜ் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன், குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து திங்கள்கிழமை (செப். 26) தீர்ப்பு அளித்தார்.

police Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe