bjp

தமிழக முதல்வரின் துபாய் பயணத்தின்போது அவர் அணிந்திருந்த ஓவர் கோட் குறித்து அவதூறாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்த சேலம் பாஜக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்மையில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய்க்குச் சென்று திரும்பினார். முதல்வரின் இந்தப் பயணம் தொடர்பாக பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில், ட்விட்டர் தளத்தில் தங்க.அருள் என்ற ஐடியில் இருந்து ஒருவர், ''துபாய் செல்லும்போது முதல்வர் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி ரூபாய் என நிதியமைச்சர் பிடிஆர் தகவல்,'' என்று தனியார் செய்திசேனலின் லோகோவுடன் பதிவிட்டிருந்தார்.

Advertisment

இதைப் பார்த்த தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ''தமிழ்நாடு காவல்துறையின் புதிய சமூக ஊடக மையத்திற்கு இது முதல் சமர்ப்பிப்பாக இருக்கலாம். வடிகட்டப்பட்ட முட்டாள் இதுபோன்ற முட்டாள்தனத்தை வெளிப்படையாக இடுகையிடுவதால் ஏற்படும் அபாயங்களை புரிந்து கொள்ளவில்லை. சங்கிகள் வாட்ஸ்ஆப் விஷத்தைத் தாண்டி செல்லக்கூடாது,'' என்று தங்க.அருள் என்ற ஐடியில் பதிவிட்ட கருத்தை 'டேக்' செய்து, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

bjp

இதுகுறித்து தமிழக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ட்விட்டர் தளத்தில் முதல்வர் பற்றி அவதூறு பரப்பிய ஐடியை வைத்து விசாரித்தபோது, பதிவரின் பெயர் அருள்பிரசாத் என்பதும், சேலம் மாவட்டம் இடைப்பாடியைச் சேர்ந்த பாஜக மேற்கு மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் என்பதும் தெரிய வந்தது. இதற்கிடையே, சேலம் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பாலசுப்ரமணியம், முதல்வர் பற்றி கலவரத்தைத் தூண்டும் வகையில் அவதூறாக கருத்து பதிவிட்ட அருள்பிரசாத் மீது நடவடிக்கை எடுக்கும்படி இடைப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisment

அதன்பேரில், காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து, அருள்பிரசாத்தை கைது செய்தார். இந்த சம்பவம் பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, அருள்பிரசாத் பதிவிட்டிருந்த கருத்து அவருடையதல்ல; அது ஒரு பார்வர்டு மெசேஜ்தான் என்றும், கடந்த காலங்களில் வெளிநாட்டுப் பயணங்களின்போது பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த கோட்டின் விலை 10 கோடி ரூபாய் என்றெல்லாம் திமுகவினர் விமர்சனம் செய்தது குறித்தும் தற்போது பெரும் விவாதமாக கிளம்பியுள்ளது.