
சேலம் அழகாபுரம் பெரிய புதூரைச் சேர்ந்த மாது மகன் ஜீவா (வயது 24). ரவுடியான இவர் டிசம்பர் 12 ஆம் தேதி மிட்டா புதூரில் வசிக்கும் அவருடைய பாட்டி ஜெயலட்சுமியின் வீட்டிற்குச் சென்று மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால், அவரை தெருவுக்கு இழுத்து வந்து தாக்கி உள்ளார். அவரை தடுக்க முயன்ற அக்கம்பக்கத்தினரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி விட்டுத் தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் அழகாபுரம் காவல்நிலைய காவல்துறையினர் ஜீவாவை சம்பவத்தன்று கைது செய்தனர்.
காவல்துறை விசாரணையில், பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் பெரிய புதூரைச் சேர்ந்த பெருமாள், அவருடைய மனைவி ஆகியோரை கையாலும் கற்களாலும் தாக்கியதாக ஒரு வழக்கு இதே காவல்நிலையத்தில் பதிவாகி இருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் ஜீவா மீது வழக்குப்பதிவு செய்யக் காரணமாக இருந்ததாக அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, அவருடைய மனைவி ஆகியோர் மீது ஆத்திரம் கொண்ட ஜீவா அவர்களையும் மதுபான பாட்டிலால் தாக்கியுள்ளார். இதுகுறித்து அழகாபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதோடு, சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ரவுடி ஜீவாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர ஆணையர் நஜ்மல் ஹோதா உத்தரவிட்டார். அதன்பேரில் ஜீவாவை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜீவாவிடம் கைது ஆணை வழங்கப்பட்டது.