
திருமணமாகாத நிலையில் விரக்தியிலிருந்த ஆட்டோ டிரைவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம் அழகாபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான மோகன். அந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டிவந்த மோகனின் பெற்றோர்கள் ஏற்கனவே இறந்துவிட்டனர். இதனால் அதிக நாட்கள் தனிமையிலேயே வசித்துவந்துள்ளார் மோகன். திருமணம் செய்துகொள்ள பல இடங்களில் மோகன் பெண் பார்த்த நிலையில், திருமணத்திற்குப் பெண் அமையவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சேலம் அஸ்தம்பட்டி மத்திய சிறைச்சாலை பின்புறம் உள்ள வனப்பகுதிக்குச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் மோகன், அங்கிருந்த மரமொன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகின.

வேட்டியைக் கொண்டு மரத்தில் தூக்கிட்டு இறந்த நிலையிலிருந்த மோகனின் உடலை மீட்ட போலீசார், உடலை குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். ஆட்டோ ஓட்டுநர் மோகன் தற்கொலை குறித்து அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், திருமணத்திற்காக அவர் நீண்டகாலமாகப் பெண் பார்த்துவந்ததும், பெற்றோர்கள் இல்லாததால் தனிமையிலேயே விரக்தியில் இருந்ததாகவும் கூறினர். இருப்பினும் திருமணமாகாத விரக்தியில் நிகழ்ந்த தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)