ஆத்தூர் அருகே, மனைவியுடனான தவறான தொடர்பை கைவிட மறுத்த தந்தையை மகனும், அவருடைய தாயாரும் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் பத்து ஏக்கர் காலனி காராமணித்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் தங்கம் மாரிமுத்து (60). விவசாயி. இவருடைய மனைவி வள்ளியம்மை (48). இவர்களுடைய மகன் லோகநாதன் (28). இவரும் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா (28).
மாரிமுத்து
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/marimuthu-deceased copy.jpg)
மாரிமுத்துவுக்குச் சொந்தமாக அதே பகுதியில் நான்கு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அவருக்கும், அவருடைய மருமகள் கவிதாவுக்கும் தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் இருவரும், 'தவறான பாலியல் உறவில்' ஈடுபட்டு வந்துள்ளனர்.
அரசல் புரசலாக இதைத் தெரிந்து கொண்ட லோகநாதன் மற்றும் அவருடைய அம்மா வள்ளியம்மை ஆகிய இருவரும் மாரிமுத்துவையும், கவிதாவையும் கண்டித்துள்ளனர். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. என்றாலும், மாமனார், மருமகள் இடையேயான தவறான தொடர்பும் தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், லோகநாதன் தன்னுடைய சொத்துகளை பிரித்து கொடுத்து விடுமாறு தந்தையிடம் கேட்டுள்ளார். சொத்துகளை பிரித்துக் கொடுத்துவிட்டால் மனைவியுடன் தனியாக சென்று விடுவேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் மாரிமுத்து சொத்துகளை பிரித்துத் தர முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதற்கிடையே, சில நாள்களுக்குமுன், கவிதாவுக்கும், லோகநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு கவிதா, தன்னுடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
லோகநாதன்
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/accused loganathan in drunken mood (1) copy.jpg)
நேற்று (ஜூன் 27, 2019) மதியம் மீண்டும் அவர் கணவர் வீட்டுக்குத் திரும்பி வந்தார். நேற்று இரவு லோகநாதன், தன் தந்தையிடம் சொத்துப்பிரிவினை தொடர்பாக தகராறில் ஈடுபட்டுள்ளார். மகனுக்கு ஆதரவாக வள்ளியம்மையும் கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில், ஆவேசம் அடைந்த இருவரும் மண்வெட்டி மற்றும் கட்டையால் மாரிமுத்துவை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். மாரிமுத்து இறந்ததால், பதற்றம் அடைந்த அம்மாவும், மகனும் இரவோடு இரவாக தலைமறைவாகிவிட்டனர்.
இன்று காலை வெகுநேரமாகியும் மாரிமுத்துவின் வீட்டில் இருந்து யாருமே வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவருடைய வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அங்கு மாரிமுத்து ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார்.
இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். டிஎஸ்பி ராஜூ, ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவலர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் விசாரணையில், மாயமான லோகநாதன் சேலம் தாதகாப்பட்டியில் உள்ள ஒரு சுடுகாட்டில் குடிபோதையில் படுத்துக்கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாவட்ட தனிப்பிரிவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தனிப்பிரிவு எஸ்ஐ சம்பத் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று லோகநாதனை கைது செய்தனர். அவருடைய தாயாரை தேடி வருகின்றனர்.
Follow Us