Corona

சேலத்தில், காவல்துறை உதவி ஆணையர் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. கைதி ஒருவவரை விசாரித்தபோது அவரிடம் இருந்து வைரஸ் கிருமி பரவியிருக்கலாம் என்ற தகவலால், உதவி ஆணையருடன் பணியாற்றி வரும் காவலர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Advertisment

சேலம் மாநகர காவல்துறையில், உதவி ஆணையர் ஒருவர் கடந்த ஒரு வாரமாக தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்தார். ஒருவேளை, கரோனா நோய்த்தொற்றாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்ததால் அவர் தன்னுடைய முகாம் அலுவலகத்திற்குள்ளேயே தனிமைப்படுத்திக் கொண்டு, வெளியே செல்லாமல் இருந்து வந்தார்.

Advertisment

இந்நிலையில், அவருக்கு இரு நாள்களாக காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில், அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச்சேர்க்கப்பட்டார். அவருக்குசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 20 நாள்களுக்கு முன்பு, பெண்களை ஆபாசப்படம் எடுத்து பாலியல் தொந்தரவு அளித்ததாக சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த லோகநாதன் உள்ளிட்ட மூன்று பேரை சேலம் நகர மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

முக்கிய கைதியான லோகநாதனுக்கு கரோனா தொற்று இருந்தது அப்போது நடந்த மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்தது, அவர்களிடம் நெருக்கமாக விசாரணை நடத்தியது, நீதிமன்றம், சிறைச்சாலைக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்ற காவலர்கள் முதல் உயரதிகாரிகள் வரை 30க்கும் மேற்பட்டோர் அப்போது தனிமைப்படுத்தப்பட்டனர். மகளிர் காவல்நிலையமும் தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டது.

இதற்கிடையே, லோகநாதனை சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லும்போது வழிக்காவல் பணியில் ஈடுபட்ட அன்னதானப்பட்டி காவலர் ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது.

இந்தநிலையில்தான், உதவி ஆணையருக்கும் லோகநாதன் மூலமாகவே கரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. லோகநாதனை கைது செய்து விசாரித்தபோது, அவருடைய வாயில் உதவி ஆணையரின் கை பட்டுள்ளது. அதன்மூலம் உதவி ஆணையரின் உடலிலும் கரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதனால் உதவி ஆணையரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றி வரும் 10 காவலர்களும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும் விரைவில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இச்சம்பவத்தால் உதவி ஆணையருடன் அலுவல் ரீதியாக நெருக்கமாக இருந்து வந்த ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.

http://onelink.to/nknapp

நோய்த்தடுப்பு நடவடிக்கையாக உதவி ஆணையரின் முகாம் அலுவலகத்தில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. அலுவலகத்தற்குள் வெளியாள்கள், புகார்தாரர்கள் வரவும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.