சேலம் வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண்டாள் யானை காலால் மிதித்ததில் பாகன் உடல் நசுங்கி பலியானார். மருத்துவ பரிசோதனை செய்ய முயன்ற கால்நடை மருத்துவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

மதுரை கள்ளழகர் கோயில் யானை ஆண்டாள். வயது முதிர்வு, உடல்நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக கடந்த 2009ம் ஆண்டு முதல் சேலம் ஏற்காடு மலையடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் கொண்டு வந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. பாகன் காளியப்பன் அந்த யானையை பராமரித்து வந்தார்.

Advertisment

ஆண்டாள் யானை, ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத 'பேடி' வகையைச் சேர்ந்தது. இந்த யானையை திங்கள்கிழமை (டிச. 2, 2019) மாலை 5 மணியளவில், கால்நடை மருத்துவர் பிரகாஷ் என்பவர், யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அதன் அருகே சென்றார். அப்போது ஆவேசமாக இருந்த யானை, மருத்துவரையும், பாகனையும் தாக்கியுள்ளது. இதில், யானையின் கால்களுக்கு இடையே பாகன் சிக்கிக் கொண்டதால் அவரை மிதித்துக் கொன்றது.

salem andal elephant incident fagan forest department investigation

Advertisment

மருத்துவர் பிரகாஷ், லேசான காயத்துடன் அங்கிருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி உயிர் பிழைத்தார். அதன்பிறகும் ஆண்டாள் யானை தொடர்ந்து ஆக்ரோஷமாக இருந்ததால், அதற்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி மயக்கமடையச் செய்து அதனை கட்டுப்படுத்தினர். இதுகுறித்து, ஏற்காடு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து, யானை மிதித்ததில் சிதைந்த நிலையில் காணப்பட்ட பாகன் காளியப்பனின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யானை ஆண்டாள், கடந்த 2013ம் ஆண்டு குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா துப்புரவு ஊழியர் பத்மினி என்பவரை தாக்கிக் கொன்றது. தற்போது பாகன் காளியப்பனை தாக்கிக் கொன்றுள்ளது. இச்சம்பவம் குறித்து ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

இச்சம்பவம் குறித்து வன அதிகாரி பெரியசாமியிடம் கேட்டோம்.

சேலத்தில் யானை பாகன் காளியப்பனை ஆண்டாள் யானை காலால் மிதித்துக் கொன்றுள்ளது. இந்த யானை ஏற்கனவே மூன்று பேரை மதுரை கோயிலில் இருந்தபோது காலால் மிதித்துக் கொன்றுள்ளது. அதன்பிறகுதான் அதன் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மதுரை அழகர் கோயிலில் இருந்து சேலம், ஊயிரியல் பூங்காவிற்குக் கொண்டு வரப்பட்டது. இங்கு வந்த பிறகும் கடந்த 2013ல் துப்புரவு ஊழியர் ஒருவரை கொன்றுள்ளது.

இதனால் யானையின் உடல்நிலையை மூன்று மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்து வருகிறோம். இந்த நிலையில், இன்று (திங்கள் கிழமை) மருத்துவர் பிரகாஷ் யானையை பரிசோதனை செய்ய வந்தபோது அவரையும், பாகனையும் தாக்கியுள்ளது. இந்த யானையை இனியும் சேலம் உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிப்பது என்பது ஆபத்தானது. அதனால் இங்கிருந்து வேறு முகாமிற்கு மாற்ற திட்டமிட்டு இருந்த நிலையில், இப்போது இப்படி ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. யானை தாக்கி இறந்த பாகன் காளியப்பன் குடும்பத்திற்கு அரசு, இழப்பீடு வழங்க உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறோம்.இவ்வாறு வனத்துறை அதிகாரி பெரியசாமி கூறினார்.