சேலத்தில், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்வதற்காக நடிகை நமீதாவின் காரை மடக்கியபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நமீதா வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

ம்

மக்களவை தேர்தலின்போது அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்குழுவினர், முக்கிய இடங்களில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்பட்டால், அத்தொகை மற்றும் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் பறக்கும்படை அதிகாரி ஆனந்த்விஜய் தலைமையில் அலுவலர்கள், காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமையன்று (மார்ச் 28, 2019) ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை சோதனையிடுவதற்காக கை காட்டி நிறுத்தினர்.

பறக்கும்படை அதிகாரிகள் அருகில் வந்து நின்ற காருக்குள் நடிகை நமீதா இருப்பது தெரிய வந்தது. காரை சோதனையிட வேண்டும் என்று அவர்கள் கூறியபோது, அதற்கு நமீதாவுடன் வந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். நான் யாரென்று தெரியுமா? தெரிந்து இருந்தும் என் காரில் சோதனை செய்கிறீர்களே? என்று நமீதாவும் எதிர்ப்பு தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி எல்லோருடைய கார்களிலும் இதுபோன்ற சோதனை நடக்கிறது என்று அதிகாரிகள் கூறினர். ஆனாலும் நமீதாவுடன் வந்தவர்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

அதற்குள் அவர்கள் ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். இதற்கிடையே, காருக்குள் ஆட்சேபத்திற்குரிய வகையில் பணம், நகை போன்றவை இல்லாததால், காரை விடுவித்தனர்.