/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/salem2344444.jpg)
சேலத்தில் உள்ள தனியார் விடுதியில் திருப்பூர் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில், நிர்வாண நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பெரிய நல்லூர் அருகே உள்ள நந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன் (26). இவர், பிப். 21- ஆம் தேதி, சேலம் 5 சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார்.செவ்வாயன்று (பிப். 23) காலை சாப்பாடு வாங்கிக் கொண்டு தனது அறைக்குச் சென்றார். அதன்பிறகு அவர் வெளியே வரவில்லை. மறுநாள் காலையில் வெகுநேரமாகியும் அவர் தனது அறைக் கதவைத் திறக்காததால், சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
காவல்துறையினர் விடுதி அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அந்த அறையில், சரவணன் கொடூரமான முறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது. சடலம், நிர்வாண நிலையில் கிடந்தது. சரவணனின் நெஞ்சு பகுதியில் ஆழமான காயம் இருந்தது. அடிவயிற்று பகுதியில் காயங்களும், கை நரம்புகள் வெட்டப்பட்டும் இருந்தது. இதன்மூலம் அவரை மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சந்தேகத்தை வலுவாக்கும் வகையில் அந்த அறையின் ஜன்னல், மர்ம நபர்கள் அதன் வழியாக எட்டிக்குதித்து தப்பி ஓடும் வகையிலும் இருந்தது.
எனினும், கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்ததால், அவரே கத்தியால் கை நரம்புகளை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாமோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது. விடுதி ஊழியர்களிடம் விசாரித்தபோது, வியாபார விஷயமாக சேலம் வந்ததாக சரவணன் கூறியதாக தெரிவித்துள்ளனர். அவர் கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும், சம்பவத்தன்று சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது அவருடைய அறைக்குச் சென்றார்களா என்பது குறித்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சரவணனின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டும் விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)