/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/investication-art.jpg)
சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை அய்யாசாமி சாலையைச் சேர்ந்தவர் ஹரி நாராயணன். இவர், நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தில் உள்ள ஒரு குவாரி நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவருடைய மகன் கஜேந்திரன் (வயது 15). தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி, மாலையில் சிறுவன் கஜேந்திரன் வழக்கம்போல் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தான். அங்கிருந்து விளையாட வெளியே சென்ற சிறுவன் அதன்பின் வீடு திரும்பவில்லை. சிறுவன் மாயமானது குறித்து செவ்வாய்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
ஹரி நாராயணன் வேலை செய்து வந்த குவாரி நிறுவனத்தில் சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த சத்யா என்கிற சத்யநாராயணன், கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இடையில் வேலையில் இருந்து விலகிவிட்ட அவர், தனியாக கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். சந்தேகத்தின் பேரில் அவரைப் பிடித்து விசாரித்தபோது, சிறுவன் மாயமான சம்பவத்தில் அவருக்குத்தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவரும், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வேப்பிலைப்பட்டியைச் சேர்ந்த இளம்பரிதி (40) என்பவருடன் சேர்ந்து கஜேந்திரனை கடத்திச் சென்று கொலை செய்ததும், சிறுவனின் சடலத்தை அவர்கள் நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியில் சாலையோரம் வீசிவிட்டதும் தெரிய வந்தது. சத்யாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இளம்பரிதியையும் காவல்துறையினர் கைது செய்தனர். சடலத்தையும் கைப்பற்றி விசாரித்தனர்.
சிறுவனின் தந்தை ஹரி நாராயணனிடம் சத்யா கார் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அதே குவாரி நிறுவனத்தில் இளம்பரிதி காவலாளியாக வேலை செய்து வந்தார். இருவரும் ஒரே நேரத்தில் வேலையை விட்டு நின்றுவிட்டனர். எனினும், அவர்களுக்குள் நட்பு தொடர்ந்து வந்துள்ளது. வேலையை விட்டு நின்றுவிட்டதால் பணத்திற்குத் திண்டாடிய இவர்கள், சிறுவனைக் கடத்திச் சென்றுஅவரின் தந்தையிடம் 5 லட்சம் ரூபாய் கேட்கத்திட்டமிட்டுள்ளனர்.
இதற்காகச் சிறுவனுக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுப்பதாக ஆசை காட்டி அவரைத்தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவன், தனக்கு சத்யா மாமா கார் ஓட்டக் கற்றுக் கொடுக்கிறார் என்று சம்பவத்தன்று உறவினர்களுக்கு அனுப்பிய எஸ்எம்எஸ்தான் இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க துருப்புச் சீட்டாக அமைந்தது. ஆனால், சிறுவன் யதார்த்தமாக உறவினர்களுக்கு எஸ்எம்எஸ் செய்ததை அறிந்த சத்யாவும், இளம்பரிதியும் அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தால் தங்கள் திட்டத்தைச் சொல்லி விடுவான் என்று கருதி, கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இவர்கள் இருவரும் சிறுவனை கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு, எருமைப்பட்டியில் சாலையோரத்தில் சடலத்தை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் சிறுவன் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலி, செல்போன், பணம் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/judgement--art-file.jpg)
இந்த வழக்கு விசாரணை, சேலம் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையே, வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த சத்யா 2021ம் ஆண்டு மே மாதம் தலைமறைவாகிவிட்டார். அதன்பிறகு, இந்த வழக்கு இரண்டாகப் பிரித்து விசாரணை நடத்தப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்ததை அடுத்து, டிசம்பர்15 ஆம் தேதி நீதிபதி தீர்ப்பு அளித்தார். இளம்பரிதிக்கு, சிறுவனைக் கடத்திய குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், கொலை குற்றத்திற்கு மற்றொரு ஆயுள் தண்டனை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், இந்த தண்டனைகளை அவர் ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி வாதாடினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)