Skip to main content

ஊர் மக்கள் பலவாறு சொன்னதால் மனைவியை கல்லால் தாக்கி கொன்ற கணவன்! விபத்தில் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்!! 

Published on 20/12/2018 | Edited on 20/12/2018
r

ஆத்தூர் அருகே, நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கல்லால் தாக்கி படுகொலை செய்த கணவன், விபத்தில் மனைவி இறந்ததாக நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லி அருகே உள்ள கூடமலையை சேர்ந்தவர் ரவி (45). இவருடைய மனைவி ராணி (40). இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் ஒரு மகளுக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது. 


ரவி, சவுதி அரேபியாவில் கல் உடைக்கும் தொழிலாளியாக உள்ளார். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து மனைவி, பிள்ளைகளை பார்த்துச் செல்வார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் சொந்த ஊரான கூடமலைக்கு வந்தார்.   மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அவர் தினமும் மது போதையில் மனைவியை அடித்து உதைத்துள்ளார். புதன்கிழமை (டிசம்பர் 19) இரவு 9 மணியளவில், ராணிக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளதாக கணவரிடம் கூறியுள்ளார்.


இதையடுத்து மனைவியை கெங்கவல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குப் போகலாம் என்று மனைவியை அழைத்துள்ளார். அதற்கு அவர் வர மறுத்தபோதும், கட்டாயப்படுத்தி தனது மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்து அழைத்துச் சென்றார். 


வீட்டில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்றவுடன், வீட்டில் இருந்த மகனுக்கு போன் செய்த ரவி, 'அம்மா வண்டியில் இருந்து கீழே விழுந்து விட்டார். உடனே வா' என அழைத்துள்ளார்.   அங்கு சென்று பார்த்தபோது தலையில் காயத்துடன் ராணி இறந்து கிடந்தார். வண்டியில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக கருதி, இருசக்கர வாகனத்திலேயே உடலை வீட்டிற்குக் கொண்டு வந்தனர். 


இந்நிலையில், இன்று (டிசம்பர் 20, 2018) காலையில், ராணியை அவருடைய கணவர் கொன்றுவிட்டதாக கெங்கவல்லி போலீசில் ராணியின் அண்ணன் தகவல் தெரிவித்தார். போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்ததை ரவி ஒப்புக்கொண்டார்.  அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ''சவுதிக்கு வேலைக்குச் செல்லும் நான், சம்பாதிக்கும் பணத்தை மனைவிக்கு அனுப்பி வைப்பேன். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊருக்கு வருவேன். இந்தமுறை சொந்த ஊருக்கு வந்திருந்தபோது மனைவியின் நடத்தை குறித்து ஊர் மக்கள் பலவாறு பேசினர். அவருக்கு சில ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறினார்கள்.


இதுபற்றி என் மனைவியிடம் விசாரித்தேன். அதற்கு அவள் சரியான பதிலைச் சொல்லவில்லை. இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் ராணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது தலையில் கல்லால் தாக்கி கொலை செய்தேன். போலீசில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக அவள் விபத்தில் அடிபட்டு இறந்துவிட்டாள் என நாடகமாடினேன்,'' என தெரிவித்துள்ளார்.


இதையடுத்து ரவியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜெயிக்கப் போவது பொன்முடியா? கே.என். நேருவா?

Published on 10/03/2019 | Edited on 10/03/2019

 

திமுக கூட்டணியில் பாரிவேந்தர் கட்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாக சொல்லப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளருமான பொன்முடி தனது மகன் கௌதம சிகாமணியை கள்ளக்குறிச்சி தொகுதியில் நிறுத்த தீவிர முயற்சி எடுத்து வந்ததும், விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு ஒன்றிய செயலாளர்களை தனிப்பட்ட முறையில் பார்த்து தன் மகனுக்கு ஆதரவு திரட்ட முயற்சித்து வருகிறார். இதற்கு இடையில் பொன்முடி மகன் கள்ளக்குறிச்சியில் போட்டியிடுகிறார் என விளம்பரங்களும் வெளிவர துவங்கியுள்ள நிலையில் இதற்கு வலு சேர்க்கும் விதமாக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள துரைமுருகன் இல்லத்திற்கு பொன்முடி தனது மகன் கவுதம சிகாமணியுடன் சந்தித்து உற்சாகமாகப்பேசிய திமுக பொருளாளர், பொன்முடியின் கைகளைப் பிடித்தபடி ‘என் மகனும், உன் மகனும் எம்.பியாக போவது உறுதி என நம்பிக்கையாக கூறியுள்ளார். 

 

k

 

இப்படி பொன்முடி தன் மகனுக்காக பாரிவேந்தரை பெரம்பலூருக்கு தள்ளிவிட நினைக்கும் நிலையில் கே.என்.நேருவோ பெரம்பலூர் தொகுதியோ திருச்சியில் உள்ள லால்குடி, குளித்தலை, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் பெரம்பலூர் என திருச்சியில் உள்ள பாதி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. ஏற்கனவே நடிகர் நெப்போலியன் நின்று அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்த தொகுதி. இந்த முறையும் அதே போலதி.மு.க.விற்கு கொடுத்தால் கட்டாயம் ஜெயித்து விடலாம் என ஜெயிக்கிற கணக்கை சொல்லியிருக்கிறார். 

 

பாரிவேந்தர் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் என இரண்டில் ஒரு தொகுதி கேட்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ரவி, “எங்களுக்கு விருப்பமான தொகுதி கள்ளக்குறிச்சிதான் அதைக் கேட்டிருக்கிறோம். விரைவில் முடிவு செய்வோம் என்று சொல்லியிருந்தார்.

 

இந்நிலையில், பாரிவேந்தர் கட்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து இரவோடு இரவாக தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர் பாரிவேந்தரின் ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர். இதற்காக போஸ்டர், பேனர் என அனைத்து வேலைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

 

p

 

கடந்த முறை பெரம்பலூரில் கோடிக்கணக்கில் செலவு செய்து அதிமுக மருதை ராஜிடம் தோற்றதால், இந்த முறை திமுக வாக்கு வங்கியோடு, கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என முடிவு செய்து தொகுதி முழுவதும் பாரிவேந்தர் வேலையில் இறங்கினார். ஸ்டாலினிடம் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை எதிர்த்து நாங்கள் முழுபலத்துடன் பண பலம், ஆட்கள் பலத்தை இறக்குகிறேன் என உறுதி கொடுத்ததால் ஸ்டாலினும் பாரிவேந்தருக்கு ஓகே சொல்லி இருப்பதாக தகவல்.

 

அதே நேரத்தில் பொன்முடி தன் மகனுக்காக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து கள்ளக்குறிச்சியை வாங்கினால் பெரம்பலூர் பாரிவேந்தருக்கு கிடைத்தால் திருச்சியில் தி.மு.க. போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. கட்சி தலைமை நெருக்கடி கொடுக்கிறது.  ஆனால் கே.என்.நேரு தரப்போ ஏற்கனவே திருச்சியில் கடந்த முறை தி.மு.க. போட்டியிட்ட மாநகர செயலாளர் அன்பழகன் செலவுக்கு பணம் இல்லாமல் தற்போது கடனாளியானார். மீண்டும் இந்த முறையும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது என்றும், அதுவும் இல்லாமல் தாராளமாக பணம் செலவு பண்ணக்கூடிய தி.மு.க. வேட்பாளர் இல்லை என்பதாலும், இந்த தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கி கொடுங்கள். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பியுமான அடைக்கலராஜ் மகன் லூயிஸ் அடைக்கலராஜ்க்கு கொடுத்தால் பணம், செல்வாக்கு தாராளமாக இருப்பதால் ஈசியா ஜெயித்து விடலாம் என தலைமைக்கு தகவல் சொல்லியிருக்கிறார். 

 

பொன்முடி தன் மகன் நிற்க வேண்டும் என்பதற்காக பாரிவேந்தரை பெரம்பலூருக்கு தள்ளிவிடவும், கட்டாயம் திருச்சி தி.மு.க. விற்காக தள்ளிவிட தலைமை முயற்சிப்பது தான் தற்போது அரசியலில் பரபரப்பாக இருக்கிறது. 

 

ஜெயிக்கப் போவது பொன்முடியா ? கே.என். நேருவா? என்கிற விவாதம் கட்சியின் மேல் மட்டங்களில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. 


 

Next Story

“நியூட்ரினோ வந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும்!” -தீக்குளித்த ரவியின் மரண வாக்குமூலம்!

Published on 02/04/2018 | Edited on 02/04/2018

 

ravi

 

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையிலிருந்து கம்பம் நோக்கி, வைகோ  நடைபயணம் மேற்கொள்வதற்கு முன்பாக, தீக்குளித்த விருதுநகர் மாவட்ட மதிமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி இறந்துபோன  நிலையில், சொந்த ஊரான சிவகாசிக்கு, ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் எடுத்து வரப்பட்டது. 


உறவினர்கள் கதறி அழுது அஞ்சலி செலுத்திய பிறகு, ரவியின் உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.  சிவகாசி நகராட்சி மின்தகன மேடை அருகே இறுதிச் சடங்கினை நிகழ்த்தினார்கள். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற வைகோ தலைமையில் அனைத்துக்கட்சிகள் சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது. அப்போது பேசிய வைகோ “மோடி தலைமையிலான அரசு, மோசடி செய்து, நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது. நியூட்ரினோவுக்கு எதிராக லட்சக்கணக்கான மக்களை திரட்டுவதற்காகவே நடைபயணம் துவங்கினேன். தீக்குளித்த நிலையிலும், நியூட்ரினோ திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று ரவி முழக்கமிட்டார். நியூட்ரினோ திட்டம் வந்தால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும். அப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, தீக்குளித்து உயிரைவிடத் துணிந்ததாக, நீதிபதியிடம் மரண வாக்குமூலம் தந்தார். ரவியின் குடும்பத்தைப் பாதுகாத்து, காப்பாற்ற வேண்டியது மதிமுகவின் கடமை.” என்றார் தழுதழுத்த குரலில்!