Skip to main content

சேலத்தில் ஒரே நாளில் 20 ரவுடிகள் அதிரடி கைது!

Published on 16/11/2018 | Edited on 16/11/2018
s


சேலம் மாநகரில் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், குற்றப்பின்னணி உடையவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்யும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.


கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி, ஒரே நாளில் 55 பேர் கைது செய்யப்பட்டனர். மார்ச் 9ம் தேதி ஒரே நாளில் 62 ரவுடிகளும், ஜூலை 9ம் தேதியன்று 57 ரவுடிகளும், 10ம் தேதியன்று 39 ரவுடிகளும், 28ம் தேதி 16 பேரும் கைது செய்யப்பட்டனர்.


அதன்பிறகு, மூன்று மாதங்களாக இதுபோன்ற நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் கைது நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.


அதையடுத்து, இன்று (நவம்பர் 16, 2018) காலை முதல் சேலம் மாநகரம் முழுவதும் ரவுடிகளைக் களையெடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் முழுவீச்சில் இறங்கினர். 


அன்னதானப்பட்டியைச் சேர்ந்த ஜவஹர், பிரகாஷ், வீச்சுக்குமார் என்கிற குமார், பிரபு, கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த தாமரைச்செல்வன், ஜீவா, மணி என்கிற பல்லு மணி, சேட்டு என்கிற தீனதயாளன், சுரேஷ், அஸ்தம்பட்டியைச் சேர்ந்த ஜாபர் அலி என்கிற புயல், அரிசிபாளையம் மணிகண்டன், சூரமங்கலம் அற்புதராஜ் உள்பட 20 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.


இவர்களில் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த ஜவஹர் மீது இரண்டு கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி வழக்கு, ஆள்கடத்தல், வழிப்பறி உள்பட 18 வழக்குகளும், ரவுடி பிரகாஷ் மீது ஒரு கொலை வழக்கு, ஐந்து கொலை முயற்சி வழக்குகள், இரண்டு வழிப்பறி வழக்குகள் உள்பட 21 வழக்குகளும் உள்ளன. 


மேலும், வீச்சுக்குமார் என்கிற குமார், ஜவஹர் ஆகியோர் ஏற்கனவே ஒரு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். பிரகாஷ் என்ற ரவுடி, இதற்குமுன்பு மூன்று முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


கிச்சிப்பாளையம் தாமரைச்செல்வன் மீது ஒரு கொலை முயற்சி, இரண்டு வழிப்பறி வழக்குகள்  உள்பட 13 வழக்குகளும், அஸ்தம்பட்டி புயல் என்கிற ஜாபர் அலி மீது ஒரு வழிப்பறி வழக்கு உள்பட 10 திருட்டு வழக்குகளும், அரிசிபாளையம் மணிகண்டன் மீது ஒரு கொலை வழக்கு, ஒரு திருட்டு வழக்கும், சூரமங்கலம் அற்புதராஜ் மீது கொலை, வழிப்பறி உள்பட 4 வழக்குகளும் உள்ளன.


போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளால் ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கர் படுகொலையைவிட, நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது!!! -எவிடென்ஸ் கதிர்

Published on 25/06/2020 | Edited on 25/06/2020
hj

 

சங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருக்கும் தண்டனை குறைப்பு மற்றும் விடுதலை கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் இதுதொடர்பாக கூறும்போது, “கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி சங்கர் என்ற இளைஞர் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவருடைய மனைவி கவுசல்யா வெட்டப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று மீண்டார், அதாவது  ஒரு கூலிப்படை கும்பல் சங்கர், கவுசல்யா கடைவீதிக்கு செல்லும்போது, வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்றது. இதில் காயங்களுடன் கவுசல்யா பிழைத்துக்கொண்டார். சங்கர் அதே இடத்தில் பலியானார்.  இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது மிக அப்பட்டமான சாதிய ஆணவ படுகொலை என்பது அனைவருக்கும் தெரியும். இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு திருப்பூர் நீதிமன்றம் தண்டனை கொடுத்தது. சிலரை விடுதலை செய்தது. இதில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருந்தனர்.  தற்போது அந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பு கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய குற்றவாளியான சின்னசாமி விடுவிக்கப்பட்டுள்ளார். கூலிப்படையை சேர்ந்த சிலருக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற தீர்ப்பு என்பது மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. சங்கருக்கு நடந்த ஆணவ படுகொலையைவிட இந்த தீர்ப்புதான் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றம் கொடுக்கின்ற தீர்ப்புகளை மதிக்கின்றோம், ஏற்றுக்கொள்கிறோம் என்பது வேறு. அதில் உண்மை தன்மை இல்லை என்கிறபோது நாங்கள் மேல் முறையிட்டுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இந்த வழக்கிலும் அந்த சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

கவுசல்யா அந்த சம்பவத்தை நேரடியாக பார்த்த ஒரு சாட்சி, அவருடைய சாட்சியைத்தான் நீதிமன்றம் ஆதாரமாக எடுத்துக்கொண்டு தீர்ப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த தீர்ப்பை நான் வாசித்து பார்த்தேன். 311 பக்கங்கள் கொண்ட தீர்ப்பாக அது இருக்கின்றது. அந்த தீர்ப்பில் ஒரு இடத்தில் கூட இந்த கொலை சாதி ஆணவப்படுகொலை என்று பதிவு செய்யப்படவில்லை. இந்தியா முழுவதும் இது சாதிக்காக நிகழ்த்தப்பட்ட ஒரு படுகொலை என்று தெரிந்திருந்தாலும், நீதிமன்றத்தின் தீர்ப்பில் ஒரு வார்த்தை கூட அந்த மாதிரியான வாசகங்கள் இல்லை. அரசுதரப்பு நீதிமன்றத்தில் போதுமான நடைமுறைகளை செய்து குற்றவாளிகளை தப்பிக்க விட்டிருக்கக்கூடாது. ஆனால் அரசு அத்தகைய எந்த முயற்சியையும் செய்யவில்லை. இதில் இருந்தே தெரிகின்றது அவர்களுக்கு எத்தகைய அனுமானங்கள் இருந்திருக்கின்றது என்று. இன்னும் இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். 

 

Next Story

உடுமலை சங்கர் கொலை வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு...

Published on 20/06/2020 | Edited on 20/06/2020
Udumalai Shankar case to be heard day after tomorrow

 

உடுமலை சங்கர் கொலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நாளை மறுநாள் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கவுள்ளது.

இருவேறு சமூகத்தை சேர்ந்த கௌசல்யாவும், சங்கரும் 2015-ல் திருமணம் செய்து கொண்டனர். 2016 மார்ச் 13-ல் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.   

கௌசல்யா தந்தை உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. தண்டனையை எதிர்த்து 6 குற்றவாளிகளும், மூன்று பேர் விடுதலையை எதிர்த்து காவல்துறையும் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் நாளை மறுநாள் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.