Skip to main content

பண்ணை பசுமை கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Sale of essential commodities through farm green shops
கோப்புப்படம்

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் சென்னையில் புயலால் பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பண்ணை பசுமை கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், பால், பிஸ்கட் விற்பனை செய்யப்படும் எனக் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். அதாவது பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுறவுத்துறை சார்பில் 10 நடமாடும் பசுமை கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த கடைகள் மூலம் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்