Skip to main content

இளம்பெண்களை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: சேலம் ரியல் எஸ்டேட் அதிபரை தப்ப வைக்கும் போலீசார்!!

Published on 06/12/2018 | Edited on 06/12/2018
m


சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் மூன்று பேரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் அவரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.


சேலம் அம்மாபேட்டை நந்தனார் தெருவை சேர்ந்தவர் அழகேசன். கூலித்தொழிலாளி. இவருக்கு ஐந்து மகள்கள். இவர்களுடைய தாய் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில், தந்தையின் பாதுகாப்பில்தான் இருந்து வந்தனர். அழகேசனின் முதல் இரண்டு மகள்களுக்கு திருமணம் நடந்துவிட்டது. 


மற்ற மூன்று மகள்களான மேனகா (33), ரேவதி (28), கலைமகள் (26) ஆகியோர் வேலைக்குச் சென்று வந்தனர். இந்நிலையில் அவர்கள் மூன்று பேரும் கடந்த 28.8.2018ம் தேதி திடீரென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். 


அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சீலநாய்க்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஒரு மாதமாக சிகிச்சையில் இருந்த நிலையில், கடந்த 28.9.2018ம் தேதி மேனகா சிகிச்சை பலனின்றி இறந்தார். கலைமகள் அபாய கட்டத்தில் இருந்தார். ரேவதி மட்டும் உயிர் தப்பினார்.


மேனகாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதால், தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பத்தில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். 


ஆனால், சேலத்தில் வின்ஸ்டார் இண்டியா சிட்டி டெவலப்பர் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்த சிவக்குமார்தான் தங்களை தற்கொலைக்கு தூண்டியதாக உயிர் பிழைத்த சகோதரிகளுள் ஒருவரான ரேவதி புகார் கூறினார். இது தொடர்பாக அவர் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஆகியோரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருந்ததாவது:

 

s


''வின்ஸ்டார் நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும் தொகையை, பதினெட்டு மாதங்களில் இரட்டிப்பு செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டது. அதை நம்பி சகோதரிகளிடமும், உறவினர்களிடமும் 15 லட்சம் ரூபாய் பெற்று, வின்ஸ்டார் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தேன்.


இந்த நிலையில்தான் மேனகாவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அக்காளின் திருமணத்திற்காக முதலீடு செய்திருந்த தொகையை திருப்பிக் கேட்டபோது வின்ஸ்டார் அதிபர் சிவக்குமார் பணத்தை தர மறுத்ததோடு, நீங்கள் செத்துப்போனால் எனக்கென்ன? உயிரோடு இருந்தால் எனக்கென்ன? என்று அலட்சியமாக பேசினார்.


அதனால் ஏற்பட்ட விரக்தியில்தான் நாங்கள் மூன்று பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம். சிகிச்சை பலனின்றி மேனகா இறந்து விட்டார். மற்றொரு சகோதரி கலைமகள் கவலைக்கிடமாக இருக்கிறார்,'' என்று புகார் மனுவில் ரேவதி கூறியிருந்தார். 


ஆனால் இந்த மனு மீது அப்போது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்கொலைக்கு தூண்டியதாக வழ க்குப்பதிவு செய்யக்கோரி ரேவதி தரப்பு, மீண்டும் காவல்துறை ஆணையரை அணுகினர். 


இதற்கிடையே, கவலைக்கிடமான நிலையில் இருந்த கலைமகளும் சிகிச்சை பலனின்றி 15.10.2018ம் தேதி உயிரிழந்தார். அதன்பிறகே, அம்மாபேட்டை போலீசார், வின்ஸ்டார் நிறுவன அதிபர் சிவக்குமார் மீது, இளம்பெண்களை தற்கொலைக்கு தூண்டியதாக இ.த.ச. பிரிவு 306ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 


இவ்வாறு வழக்குப்பதிவு செய்து ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் சிவக்குமாரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.


இதுகுறித்து போலீசாரிடம் விசாரித்தபோது, ''வின்ஸ்டார் சிவக்குமார் சென்னையில் உள்ள ஒரு வழக்கறிஞரின் பாதுகாப்பில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்பேரில் தனிப்படை போலீசாரும் இதுவரை மூன்று முறை சென்னயையில் தேடி விட்டோம். ஆனாலும் சிவக்குமார் இருக்கும் இடம் தெரியவில்லை. தொடர்ந்து அவரை தீவிரமாக தேடி வருகிறோம்,'' என்றனர்.


தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்ய வைக்கவோ பலமுறை அலைக்கழித்த காவல்துறையினர், வின்ஸ்டார் சிவக்குமாரை கைது செய்யாமல் அவரை தப்பிக்க வைக்கவே திட்டமிட்டே காலம் கடத்தி வருவதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலத்தில் பாட்டில் வீச்சு- ஏழு பேர் கைது! 

Published on 25/09/2022 | Edited on 25/09/2022

 

 

salem rss leader incident 7 person arrested police investigation

 

சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் நிர்வாகி ராஜன் என்பவரது வீட்டில் இன்று (25/09/2022) காலை அடையாளம் தெரிய மர்மநபர்கள் மண்ணெண்ணெய் பாட்டிலை  வீசினர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள், பின்னர் இந்த சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

 

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர், ராஜன் வீட்டுக்கு காவல்துறைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக, ஏழு பேரை காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

 

விசாரணையில் மண்ணெண்ணெய் பாட்டிலை வீசியதாக இரண்டு பேரை கைது செய்த காவல்துறையினர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் ஐந்து பேர் என மொத்தம் ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் எஸ்டிபிஐ அமைப்பின் சேலம் மாவட்டத் தலைவர் சையது அலி, சேலம் கிளைத் தலைவர் காதர் உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

 

இதனிடையே, அம்மாப்பேட்டை காவல் நிலையம் முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்ட 50- க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களைக் குண்டு கட்டாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

 

பெட்ரோல், மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சைத் தொடர்ந்து, பா.ஜ.க. மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

 

Next Story

“பெரியார் பல்கலை தொலைதூர கல்வித்திட்டம் வழங்கும் படிப்புகள் செல்லாது” - யுஜிசி அதிரடி அறிவிப்பு!

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

UGC has announced courses offered Periyar University Distance Education Program not valid

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் படிப்புகள் செல்லாது எனவும், அத்திட்டத்திற்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் யுஜிசி அறிவித்துள்ளது.  

 

சேலத்தை அடுத்துள்ள கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் அரசு, நிதியுதவி பெறும் மற்றும் தனியார் என 125க்கும் மேற்பட்ட கலைக்கல்லூரிகள் இந்தப் பல்கலையுடன் இணைவு பெற்றுள்ளன.

 

இந்தப் பல்கலைக்கழகத்தில், 'பிரைடு' என்ற பெயரில் தொலைதூரக் கல்வித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பல்கலைக்கழகத்திற்கு பெரிய அளவில் இந்த திட்டத்தின் மூலம் வருவாயும் கிடைத்து வருகிறது.

 

இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வித்திட்டத்தில் வழங்கப்படும் எந்த ஒரு படிப்பும் செல்லாது என்றும், தொலைநிலைக் கல்வித்திட்டத்திற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) திடீரென்று அறிவித்துள்ளது.

 

இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரியார் பல்கலையில் கடந்த 2007 - 2008 கல்வி ஆண்டு முதல் 2014 - 2015 ல்வி ஆண்டு வரையிலும், அதையடுத்து 2019 - 2020 கல்வி ஆண்டிற்கும் தொலைதூர கல்வித்திட்டத்தில் பட்டப்படிப்புகளை வழங்க அனுமதி வழங்கப்பட்டது. தொலைதூர கல்வித்திட்டத்திற்கென முழு நேர இயக்குநர் இல்லாதது, போதிய முழுநேர பேராசிரியர்கள் இல்லாதது, ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் முறையான படிப்பு மையங்கள் அமைக்கப்படாதது தொடர்பாக பெரியார் பல்கலை மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.

 

இது தொடர்பாக யுஜிசியின் புகார் மறுசீரமைப்புக்குழு ஆலோசனை மேற்கொண்டதன் பேரில் சில பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2022 - 2024 வரை எந்த ஒரு உயர்கல்வி நிறுவனங்களின் விண்ணப்பமும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது. அதேபோல், ஏற்கனவே 2021 - 2022ம் ஆண்டு வழங்கப்பட்ட விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படவில்லை. பெரியார் பல்கலைக்கழகத்தின் மீதான புகார்கள் மற்றும் விதிமீறல்கள் அனைத்தும் தமிழக ஆளுநர், உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

 

மேலும், பெரியார் பல்கலை தொலைதூரக் கல்வித்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் எந்த ஒரு படிப்பிலும் மாணவர்கள் சேர வேண்டாம். பல்கலையின் தொலைதூரக் கல்வித்திட்டத்திற்கு யுஜிசி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கீகாரம் இல்லாத படிப்புகளில் சேர்வதன் மூலம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.