Skip to main content

தன் தாய் வீட்டு சீதனத்தை அண்ணாவிடம் வழங்கிய சகுந்தலா சோமசுந்தரம் காலமானார்!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

sakunthala passed away in chennai

 

சீனா இந்தியாவுடன் போர் தொடுத்த போது தன் தாய் நாட்டை காக்க தன் தாய் வீட்டு சீதனங்களை அனைத்தையும் நிதி திரட்டி அறிஞர் அண்ணாவிடம் கொடுத்த சகுந்தலா சோமசுந்தரம் அம்மையார் நேற்று (06/01/2022) காலமானார். அவரது உடல் பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலிக்கு பிறகு சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள செண்டாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.டி.எஸ் என்கிற எஸ்.டி.சோமசுந்தரம். முன்னாள் அமைச்சரான இவரை தெரியாதவர்களே யாரும் இருக்க முடியாது. மாணவ பருவத்திலேயே இந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்கு மாணவர்களை ஒன்றிணைத்து போராடியவர். அதைத் தொடர்ந்து திராவிட இயக்க வளர்ச்சிக்காக மாணவர்களை அழைத்து வந்தவர், ஈழப் போருக்கு எதிராக போராடி சிறை சென்றவர். இப்படி பல போராட்டங்கள், சிறைகளைக் கண்டவர், பின்னாளில் அ.தி.மு.க.வில் இணைந்து அமைச்சராகப் பதவி வகித்தார். 

 

இவரது மனைவி சகுந்தலா சோமசுந்தரம் (வயது 86). தன் கணவர் நாட்டுக்காக உழைத்தது போலவே அவருக்கு நிகராக தாய் நாட்டுக்காக பல தியாகங்களை செய்து வெளியே தெரியாமல் இருந்தவர். சீனா இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்த போது தாய் நாட்டை காக்க அறிஞர் அண்ணா நிதி திரட்டுவதை அறிந்த சகுந்தலா அம்மையார், தன் திருமணத்தின் போது தனக்கு தாய் வீட்டில் இருந்து தனக்காக கொடுத்த நகை உள்பட அத்தனை சீதனங்களையும், அறிஞர் அண்ணாவிடம் வழங்கியுள்ளார். 

 

இந்த நிலையில் சகுந்தலா சோமசுந்தரம் வயது முதிர்வின் காரணமாக நேற்று (06/01/2022) சென்னையில் காலமானார். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு இன்று (07/01/2022) அவரது சொந்த ஊரான செண்டாங்காடு கொண்டு வரப்பட்டு உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் கட்சி பாகுபாடின்றி ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய பிறகு உடல் தகனம் செய்யப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'கொங்கு சீமையின் கொள்கை வேங்கையை இழந்துவிட்டேன்' - வைகோ இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'I have lost my  Kongu policy friend'-Vaiko's obituary

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாகத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். என்ன காரணம் எனத் தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது அன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

'I have lost my  Kongu policy friend'-Vaiko's obituary

மதிமுக எம்.பி.யின் மறைவுக்குப் பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், ‘அன்பு சகோதரரை இழந்துவிட்டேன். அன்புச் சகோதரர், கொங்கு சீமையின் கொள்கை காவலர் கணேசமூர்த்தியை இழந்துவிட்டேன். கொங்கு சீமையின் கொள்கை வேங்கை கணேசமூர்த்தி மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். கணேசமூர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.