sakunthala passed away in chennai

Advertisment

சீனா இந்தியாவுடன் போர் தொடுத்த போது தன் தாய் நாட்டை காக்க தன் தாய் வீட்டு சீதனங்களை அனைத்தையும் நிதி திரட்டிஅறிஞர் அண்ணாவிடம் கொடுத்த சகுந்தலா சோமசுந்தரம் அம்மையார் நேற்று (06/01/2022) காலமானார். அவரது உடல் பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலிக்கு பிறகு சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள செண்டாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.டி.எஸ் என்கிற எஸ்.டி.சோமசுந்தரம். முன்னாள் அமைச்சரான இவரை தெரியாதவர்களே யாரும் இருக்க முடியாது. மாணவ பருவத்திலேயே இந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்கு மாணவர்களை ஒன்றிணைத்து போராடியவர். அதைத் தொடர்ந்து திராவிட இயக்க வளர்ச்சிக்காக மாணவர்களை அழைத்து வந்தவர், ஈழப் போருக்கு எதிராக போராடி சிறை சென்றவர். இப்படி பல போராட்டங்கள், சிறைகளைக் கண்டவர், பின்னாளில் அ.தி.மு.க.வில் இணைந்து அமைச்சராகப் பதவி வகித்தார்.

இவரது மனைவி சகுந்தலா சோமசுந்தரம் (வயது 86). தன் கணவர் நாட்டுக்காக உழைத்தது போலவே அவருக்கு நிகராக தாய் நாட்டுக்காக பல தியாகங்களை செய்து வெளியே தெரியாமல் இருந்தவர். சீனா இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்த போது தாய் நாட்டை காக்க அறிஞர் அண்ணா நிதி திரட்டுவதை அறிந்த சகுந்தலா அம்மையார், தன் திருமணத்தின் போது தனக்கு தாய் வீட்டில் இருந்து தனக்காக கொடுத்த நகை உள்பட அத்தனை சீதனங்களையும், அறிஞர் அண்ணாவிடம் வழங்கியுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் சகுந்தலா சோமசுந்தரம் வயது முதிர்வின் காரணமாக நேற்று (06/01/2022) சென்னையில் காலமானார். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு இன்று (07/01/2022) அவரது சொந்த ஊரான செண்டாங்காடு கொண்டு வரப்பட்டு உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் கட்சி பாகுபாடின்றி ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய பிறகு உடல் தகனம் செய்யப்பட்டது.