
விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா இரும்பை கிராமத்தின் அருகே திண்டிவனம் - புதுச்சேரி செல்லும் புறவழிச்சாலை பகுதியில் ஒரு சாய்பாபா கோவில் சில மாதங்களாக கட்டப்பட்டு வந்தது. அந்த கோவிலில் வைப்பதற்காக வெளியூரிலிருந்து பெரிய சாய்பாபா சிலை ஒன்று கொண்டு வரப்பட்டு கோவில் கட்டப்படும் இடத்தின் அருகில் கூரைக் கொட்டகை அமைத்து அதில் மரப் பெட்டிக்குள் வைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அந்த பகுதியில் புகுந்து சாய் பாபா சிலை வைக்கப்பட்டிருந்த மரப்பெட்டியைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். மரப்பெட்டி தீயில் எரிந்து சாம்பலானதும், அதில் வைக்கப்பட்டிருந்த சிலையின் தலையை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். மறுநாள் கோவில் பணி செய்வதற்காக சென்றவர்கள் இதை பார்த்து விட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரியைச் சேர்ந்த கோவில் நிர்வாகி சந்துரு என்கிற சந்திரசேகர் ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு, சாய்பாபா சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார், எங்கிருந்து வந்தனர், எதற்காக சாய்பாபா சிலை உடைத்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். உடைக்கப்பட்ட சாய்பாபாவின் சிலை 5 லட்சம் மதிப்பு என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.