Advertisment

சடையநேரி-புத்தன்தருவை குளங்களை விரைந்து நிரப்பிட தி.மு.க. இளைஞர் அணி கோரிக்கை.!!!

joyal

பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விட்டு, சடையநேரி-புத்தன்தருவை குளங்களை விரைந்து நிரப்பிடவேண்டும் மாவட்ட ஆட்சியாளர்-பொதுப்பணித்துறைக்கு தி.மு.க. இளைஞரணி கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக, தி.மு.க.வின் மாநில இளைஞரணி துணைச்செயலாளர்.ஜோயல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலிருந்து., " தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம், உடன்குடி ஒன்றியங்கள் மிகவும் வறட்சி பகுதிகளாக இருந்து வருகிறது. உடன்குடி ஒன்றியத்தில் சடையநேரி குளம், புத்தன்தருவை, தாங்கை குளம் என ஏராளமான குளங்கள் அமைந்துள்ளன. இந்த குளங்கள் மூலமாக பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெற்று வருகிறது. மேற்கண்ட பகுதிகளிலுள்ள குளங்களில் கடந்த பல ஆண்டுகளாகவே போதுமான அளவிற்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்பபடவில்லை. இக்காரணத்தினால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பலஆயிரம் அடி அதல பாதாளத்திற்கு கீழாக குறைந்துபோனதால் கடல்நீர் உட்புகுந்து விட்டது. நிலத்தடிநீர் உவர்ப்புத்தன்மையாக மாறிவிட்டதால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் நிலத்தடிநீரை பயன்படுத்தமுடியாத துர்பாக்ய நிலை ஏற்பட்டு பொதுமக்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்தப்பகுதியிலுள்ள பொதுமக்கள், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தனிக்கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டுவந்து வருடம் முழுவதும் இங்குள்ள குளங்களில் தண்ணீரை தேக்கி வைப்பதற்கான வழிமுறைகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ளவேண்டும். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி தாமிரபரணி ஆற்றின் மூலமாக தண்ணீர் பெறும் சடையநேரி குளம், புத்தன்தருவை குளம் உள்ளிட்ட 53குளங்களையும் போர்க்கால அடிப்படையில் தூர் வாரி சீரமைத்து ஆழப்படுத்திடவேண்டும். பாசனக்குளங்களுக்கு தண்ணீர் கொண்டுவரப்படும் நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்து, அவற்றின் கரைகளை பலப்படுத்திடவேண்டும் என்று திமுக இளைஞரணி சார்பில் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிறோம். இருந்தபோதும் இதில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கண்டனத்திற்குரியதாகும்.

இந்நிலையில் கடந்த மாதத்தில் கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றுக்கு தண்ணீர் தரும் பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பியது. தொடர்ந்து பெய்த கனமழையால் ஆற்றில் திறந்துவிடப்பட்ட அதிகப்படியான தண்ணீரை பாசனக்குளங்களுக்கு கொண்டுசெல்ல பொதுப்பணித்துறை தவறியதால் ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி சுமார் 15டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலந்துவிட்டது. இந்தநேரத்தில் ஏதோ பெயரளவிற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரால் தற்போது சடையநேரி குளத்தில் ஒரளவிற்கு தண்ணீர் உள்ளது. இதுவே புத்தன்தருவை உள்ளிட்ட சில குளங்கள் இன்னும் சரியான அளவில் நீர்வரத்து இல்லாமல் வெறும் கட்டாந்தரைகளாகவே காட்சி அளித்து வருகிறது. தற்போதுள்ள சூழலில் தாமிரபரணிக்கு தண்ணீர் தரும் அணைகள் நிரம்பிய நிலையிலேயே இருந்து வருகிறது.

அடுத்துவரும் அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்காலம் துவங்கிவிடும். இந்நேரத்தில் அணைகளில் ஏற்கனவே இருப்பில் இருக்கும் தண்ணீரை ஆற்றில் திறந்துவிடும் இக்கட்டான சூழ்நிலை ஏற்படும்போது தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். அந்தநேரத்தில் ஆற்றில் வரும் அதிகப்படியான தண்ணீரை குளங்களில் கொண்டு சென்று சேமித்துவைக்க முடியாமல் மீண்டும் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லும் அவல நிலை தான் ஏற்படும். எனவே இதனைக்கருத்தில்கொண்டும், நெல்லை மாவட்ட அணைகள் நிரம்பி இருப்பதை கவனத்தில் கொண்டும் தாமிரபரணி ஆற்றில் இப்போது இருந்தே போதுமான அளவிற்கு தண்ணீரை உடனடியாக திறந்துவிட்டு வறட்சி பகுதியிலுள்ள சடையநேரி, புத்தன்தருவை, தாங்கை குளம் உள்பட தாமிரபரணி ஆற்றின் மூலமாக நீர்வரத்து பெறும் அனைத்து குளங்களையும் தாமதமின்றி நிரப்பிடவேண்டும். இதன்மூலமாக சாத்தான்குளம், உடன்குடி, திருச்செந்தூர் சுற்று வட்டாரத்திலுள்ள ஏராளமான கிராமங்களில் நிலத்தடிநீரின் உவர்ப்புத்தன்மையை மாற்றமுடியும். அதோடு கடந்த பல வருடங்களாகவே போதுமான தண்ணீரின்றி விவசாய சாகுபடிப் பணிகளை சரியான முறையில் செய்யமுடியாமல் வறுமையில் வாடி வரும் விவசாயிகள் இந்த வருடமாவது நெற்பயிர், முருங்கை, காய்கறி போன்ற சாகுபடிகளை செய்து பயன்பெற முடியும். எனவே, பொதுமக்கள், விவசாயிகள் நலன்கருதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளரும், பொதுப்பணித் துறையினரும் இனியும் காலம் தாழ்த்தாது தாமிரபரணி பாசனத்திலுள்ள அனைத்து குளங்களையும் விரைந்து நிரப்பிட வழிவகை செய்திடவேண்டும்." என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

joyal
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe