மாணவிகளின் பாதுகாப்பு; ஆளுநரின் கருத்தில் முரண்பாடு!

Safety of female students Contradiction in the opinion of the governor

மேகாலயா, மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்கள் உருவான தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த 21ஆம் தேதி (21.01.2025) சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது. உயர் கல்விக்காக வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்களது மகள்களைத் தமிழகத்திற்கு அனுப்புவதை மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர். பெண்களுக்கு டெல்லி பாதுகாப்பற்றதாக நினைக்கும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், தமிழகத்தைப் பாதுகாப்பான மாநிலமாகக் கருதுகின்றனர்.

இங்குத் தொடர்ந்து பாதுகாப்பான சூழல் நிலவுவதால் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகள் அதிகளவில் தமிழகத்திற்குப் படிக்க வருகின்றனர். பெண்களுக்குத் தமிழகத்தில் நிலவும் பாதுகாப்பான சூழல் டெல்லியில் இல்லை. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தமிழகத்தில் வசிப்பதற்கு இங்குள்ள மக்களின் அன்பும், விருந்தோம்பலுமே காரணம் ஆகும். பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாகத் தமிழக விளங்குகிறது” எனப் பேசியிருந்தார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பொடவூரில் உள்ள பிரம்ம குமாரிகள் மையத்தில் அகில இந்திய மகளிர் மாநாட்டை, ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (29.01.2025) தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “நான், கல்லூரிகளில் நடைபெறும் பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு தங்கப் பதக்கம், வென்ற மாணவிகளிடம் கலந்துரையாடுவேன். மாணவிகளின் எதிர்கால விருப்பங்களை அறிந்துகொள்வதற்காக அவர்களுடன் கலந்துரையாடுகிறேன். இளம் தலைமுறையினர் தங்கள் எதிர்காலத்தை எப்படி உருவாக்க விரும்புகிறார்கள் என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

அப்போது, பதக்கம் பெற்ற மாணவிகள் பலரும் கண்களில் கண்ணீருடன் நான் சென்னைக்குச் சென்று படிக்க மாட்டேன் எனக் கூறுவார்கள். சென்னைக்குச் சென்று படிப்பது பாதுகாப்பில்லை என தங்கள் பெற்றோர்கள் கருதுவதாகவும் அந்த மாணவிகள் வேதனையுடன் தெரிவிப்பார்கள். இதுதான் இங்கு இருக்கக்கூடிய பிரச்சனை. எனவே சென்னையைப் பாதுகாப்பான நகரமாக மாற்ற வேண்டும். நகரங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” எனப் பேசினார். ஆளுநரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Chennai kanchipuram
இதையும் படியுங்கள்
Subscribe