Safe delivery of jewellery to women who lost her jewelry bag in the bus

சென்னை மாதவரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு சனிக்கிழமை இரவு அரசுப் பேருந்து புறப்பட்டது. பேருந்தை திருச்சி உறையூரைச் சோ்ந்த எஸ்.ரமேஷ் ஓட்ட, திருச்சி காட்டூரைச் சோ்ந்த ஆா்.கோபாலன் என்பவா் நடத்துநராகப் பணியாற்றினாா்.

Advertisment

இந்தப் பேருந்தில், பெரம்பலூா் வடக்கு மாதவி சாலை சாமியப்பா நகரைச் சோ்ந்த ச.மதீனா என்பவா், தனது தாய், பாட்டியுடன் சென்னை மாதவரத்திலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைககளைக் கொண்ட துணி பையுடன் ஏறி, பெரம்பலூரில் பையை பேருந்திலேயே மறந்து வைத்துவிட்டு இறங்கிவிட்டாா். பேருந்து நேற்று அதிகாலை திருச்சி கன்டோண்மென்ட் கோட்ட போக்குவரத்து பணிமனைக்கு வந்தபோது, அதில் கேட்பாரற்றுக் கிடந்த பையை ஓட்டுநரும், நடத்துநரும் சோதனையிட்டனா். பையில், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்ததையடுத்து, அதனைப் பணிமனை பாதுகாவலரிடம் ஒப்படைத்தனா்.

Advertisment

இதனிடையே தவறவிட்ட பையைத் தேடி மதீனா திருச்சி பணிமனைக்கு வந்தாா். அவா்களிடம் 81.150 கிராம் தங்க மற்றும் 149.100 கிராம் வெள்ளி நகைகள் உள்ளிட்டவை அடங்கிய துணிப் பையை ஓட்டுநா் எஸ்.ரமேஷ், நடத்துநா் ஆா்.கோபாலன் ஆகியோா் நேற்று ஒப்படைத்தனா். அப்போது, திருச்சி கோட்ட மேலாளா் ஜேசுராஜ், கிளை மேலாளா் சரவண பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நகை பையை பாதுகாப்பாக எடுத்து வைத்து ஒப்படைத்த அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநருக்கு பையைத் தவறவிட்டவரும், பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனா்.

Advertisment